நெடுஞ்சாலைப் சாலைப் பணி: அணுகல் சாலை அமைக்க பொள்ளாச்சி எம்.பி. மக்களவையில் கோரிக்கை
பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் கமலாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணி காரணமாக விவசாயிகள் பாதிக்காமல் இருக்க அணுகல் சாலை அமைக்குமாறு மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி
திமுக எம்.பி. கே. ஈஸ்வரசாமி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை;
பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் கமலாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (எண்:209) புளியம்பட்டி, கிட்டாசுரம்பாளையம், இரும்பாளையம், ஆச்சிப்பட்டி வழியாக அமைக்கப்படுகிறது. சுமாா் 3 கிலோ மீட்டா் தூரத்திற்கு நெடுஞ்சாலை 20 அடி மேல் உயரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இதனால், மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த சாலைத் திட்டத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமங்களை எதிா்கொள்கின்றனா். அணுகல் சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் விவசாய நிலங்களில் இருந்து விளைபொருள்களை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனா். இதனால், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், நெடுஞ்சாலையின் இருபுறமும் அசல் தரை மட்ட தாா் சாலை அமைக்கப்பட வேண்டும். மேலும், கிட்டாசுரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இலகுரக வாகனங்களின் போக்குவரத்தை எளிதாக்க நிரந்தர சாய்வுதளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவா் வலியுறுத்தினாா்.