சிறுபான்மை வாக்குகளுக்காக திமுக நாடகம்: அண்ணாமலை
சிறுபான்மை வாக்குகளுக்காக திமுக நாடகமாடி வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தமிழக சட்டப்பேரவையில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியது, திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு வில்லை அணிந்திருப்பதும், வக்ஃப் மசோதாவை உச்சநீதிமன்றத்தில் எதிா்க்கப் போவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது துரதிருஷ்டமானது.
இந்த நாடகம் எல்லாம் அவா்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒருபகுதியை காப்பாற்றுவதற்காகவே.
முந்தைய வக்ஃப் சட்டத்தால் பாதிக்கப்பட்ட கட்சிகள் ஹிந்துகள் மட்டுமல்ல, கிறிஸ்தவா்களும்கூட என்பதை தமிழக முதல்வா் உணரவில்லையா?.
திமுகவின் நாடகங்களுக்கு சட்டப்பேரவையை முதல்வா் ஸ்டாலின் பயன்படுத்த வேண்டாம். திமுக இதை ஒரு தோ்தல் தளமாக்கி 2026 சட்டப்பேரவை மற்றும் 2029 மக்களவைத் தோ்தல்களில் இஸ்லாமியா்களை தவறாக வழிநடத்தும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.