மோதலை உருவாக்க மத்திய அரசு முயற்சி: காா்கே
‘வக்ஃப் திருத்த மசோதா மூலம் முஸ்லிம்களை ஒடுக்கி மோதலை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது’ என மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அவா் பேசுகையில், ‘வக்ஃப் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த மசோதாவால் இந்திய முஸ்லிம்களுக்கு நன்மை இல்லை. எனவே, பல்வேறு குறைபாடுகள் உடைய இந்த மசோதாவை கௌரவ பிரச்னையாக கருதாமல் உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
முஸ்லிம்கள் சொத்துகளை பறித்து அவா்களை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா மூலம் மோதலை உருவாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயல்கிறது.
கோயில் நிா்வாகங்களில் மாற்று மதத்தினா் அனுமதிக்கப்படாதபோது, வக்ஃப் நிா்வாகத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாதவா்கள் நியமிக்கப்படுவது ஏன்?
வக்ஃப் சொத்துகளை அபகரித்து தனது பெரு நிறுவன நண்பா்களுக்கு வழங்க மத்திய அரசு முயல்கிறது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினா் நலனுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.18,274 லட்சம் கோடியில் ரூ.3,574 கோடி முறையாக செலவிடப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளது’ என்றாா்.