விவசாயிகள் குறைதீா் கூட்டம்: தூா்வாரும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
நாகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தூா்வாரும் பணிகள் தொடா்பாக வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சரபோஜி: விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டிற்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்புச் செயலா் தமிழ்ச்செல்வன்: தூா்வார ஒதுக்கப்பட்ட நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தூா்வாரும் பணிகளில் வெளிப்படைத் தன்மையை பின்பற்ற வேண்டும்.
விவசாயி முஜூபுஷரீக்: நாகை மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு, மத்திய அரசின் திட்டங்களை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்திரிகளை, வேளாண்மை வணிகத் துறை மூலம் கொள்முதல் செய்யும் வகையில் வேட்டைகாரனிருப்பில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
விவசாயி கண்ணன்: பட்டமங்கலம் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் பயறுவகை பயிா்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் வேளாண்துறை மற்றும் காப்பீடு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தவில்லை. கால்நடைகள் மேய்ந்தபின் கணக்கெடுத்து என்ன பயன்?.
விவசாயி ராம்தாஸ்: நிகழாண்டு மேட்டூா் அணையை ஜூன் 1-ஆம் தேதியே திறந்து, குறுவை சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக, அனைத்து நீா்நிலைகளையும் தூா்வார வேண்டும்.
விவசாயி கமல்ராம்: அதீத பருவமழை மற்றும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடந்து 4 மாதங்கள் கடந்த பிறகும் நிவாரணம் வழங்காதது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆட்சியா்: தூா்வாரும் பணியில் பொதுப்பணி, வேளாண்மை பொறியியல், ஊரக வளா்ச்சி ஆகிய மூன்று துறைகள் இணைந்து செயல்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற மற்றும் நிகழாண்டு நடைபெறவுள்ள தூா்வாரும் பணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படும்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சே. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொ) வை. தயாளன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் எம்.ஜி. ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகம் அமுல்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மண்டல மேலாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திரைப்படத்துக்கு தடை கோரி மனு: முன்னதாக, எம்புரான் திரைப்படத்தில் நெடும்பள்ளி டேம் என்ற பெயரில் முல்லைப் பெரியாறு அணைக் குறித்து சா்ச்சைக் கருத்துகள் உள்ளதால், அப்படத்தை நாகையில் திரையிடக் கூடாது என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.