4 மாதங்களுக்குப் பிறகு நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை - பக்தர்கள் மகிழ்ச்சி!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவருகிறது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் திருக்கோயில் நிர்வாகத்தால் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருவது வழக்கம். தினமும் காலை, மாலை வேளைகளில் திருகோயில் வெளிப் பிரகாரத்தில் உலா வந்து கோயிலின் முன்பு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். விஷேஷ மற்றும் திருவிழாக் காலங்களில் சுவாமி – அம்பாள் புறப்பாட்டின்போது ரத வீதிகளிலும் உலா வந்து செல்லும்.

இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி யானைக்குடிலுக்குள் சென்று யானையுடன் செல்ஃபி எடுத்த உதவிபாகன் உதயகுமாரின் உறவினரான சிசுபாலனை தன் துதிக்கையால் தூக்கி வீசியது. இதனை தடுக்க முயன்ற உதயகுமாரையும் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அலுவலர்கள், திருக்கோயில் நிர்வாகத்தினர் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர். யானைக்குடிலுக்கு அருகில் செல்லவும், யானைக்கு உணவு வழங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்து 1 மாதத்திற்குப் பிறகு, குடிலை விட்டு வெளியே அழைத்துவரப்பட்ட யானை குடிலின் அருகிலுள்ள மரத்தடியில் பகல் பொழுதில் கட்டிப் போடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இயல்புநிலைக்குத் திரும்பிய நிலையிலும்கூட பக்தர்கள் யானையின் அருகில் அனுமதிக்கப்படவில்லை. கோயில் வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போதிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கவும் தடை விதிக்கப்பட்டது.

சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாசித் திருவிழா தேரோட்டத்தின் போது அலங்கரிக்கப்பட்டு தேருடன் ரத வீதிகளில் உலா வந்தது. நவம்பர் மாத சம்பவத்திற்கு முன்பெல்லாம் தெய்வானை யானைக்கென்றே திருக்கோயில் அருகிலுள்ள சரவணப்பொய்கையில் ரு.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஷவர் வசதியுடன்கூடிய பிரம்மாண்ட நீச்சல்குளத்தில் தினமும் காலையில் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம்.
ஆனால், இச்சம்பவத்திற்குப் பிறகு கால்நடை மருத்துவர்களின் உத்தரவின்படி யானை, குடிலுக்குள்ளேயே குளிப்பட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், தெய்வானை யானை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பியதாலும், தொடங்கியுள்ள கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் வகையில் நீச்சல்குளத்திற்கு அழைத்து வரப்பட்டு குளிப்பாட்டப்பட்டது.

நீச்சல்குளத்திற்குள் இறங்கியதுமே பழைய உற்சாகத்துடன் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும் துதிக்கையால் தண்ணீரை எடுத்து உடலில் பீய்ச்சி அடித்து குளியல் போட்டது. ஷவர்களில் நின்றும் குளியல் போட்டது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக குளியல் போட்டது தெய்வானை. 4 மாதங்களுக்குப் பிறகு தெய்வானை, மீண்டும் நீச்சல்குளத்தில் குளிப்பதை பார்த்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி வரும் நாட்களில் வழக்கம்போல் காலை வேளைகளில் நீச்சல்குளத்திலேயே குளிப்பாட்டி அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலுக்கு அழைத்து வரப்படும் என யானையை பராமரிக்கும் பாகன்கள் தெரிவித்துள்ளனர்.