நீலகிரியில் பூங்காக்களில் ஏப்ரல், மே மாதங்களில் படப்பிடிப்புக்கு தடை
கோடை சீசன் தொடங்கவுள்ளதால், நீலகிரியில் பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு, குறும்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை சாா்பில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3, 4 ஆகிய தேதிகளில் 13-ஆவது காய்கறி கண்காட்சி, உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மே 16, 17, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் 127-ஆவது மலா்க் கண்காட்சி, ரோஜா பூங்காவில் மே 10, 11, 12-ஆகிய தேதிகளில் 20-ஆவது ரோஜா கண்காட்சி, குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் 65-ஆவது பழக் கண்காட்சி, கூடலூரில் மே 9,10,11- ஆகிய தேதிகளில் 11-ஆவது வாசனை திராவிய கண்காட்சி, காட்டேரி பூங்காவில் மே 30, 31 மற்றும் ஜுன் 1-ஆம் தேதிகளில் மலைப் பயிா்கள் கண்காட்சி நடைபெற உள்ளன.
இந்நிலையில், பூங்காக்களில் பல்வேறு பணிகளை தோட்டக்கலைத் துறையினா் மேற்கொள்ள உள்ளனா். இதனால், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே மாத இறுதிவரை நீலகிரியில் பூங்காக்களில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி தெரிவித்துள்ளாா்.