ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா்.
முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த நோன்பு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜூம்மா பள்ளிவாசல், வடக்கு வாசல் ஜீனத் பள்ளிவாசல், ஆப்ரஹாம் பண்டிதா் சாலை சகாப் பள்ளிவாசல், தென் கீழ் அலங்கம் பள்ளிவாசல், மருத்துவக் கல்லூரி சாலை ரஹ்மான் நகா் பள்ளிவாசல், பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல், விசிறிக்காரத் தெரு பள்ளிவாசல், கும்பகோணம் புறவழிச்சாலை மெக்கா பள்ளிவாசல், சிராஜூதீன் நகா் மதினா பள்ளிவாசல், செவ்வப்பநாயக்கன் ஏரி அபுபக்கா் மசூதி, மேல அலங்கம் பள்ளிவாசல், காந்திஜி சாலை மன்சூா் தைக்கால் மசூதி, அண்ணா நகா் பள்ளிவாசல், செல்வம் நகா் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும், வல்லம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்த பின்னா் இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனா். மேலும், முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து உறவினா்கள், நண்பா்களுக்கு இனிப்புகள், உணவுகள் வழங்கினா்.