கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி.
இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு பதிவு கோரி சென்னையிலுள்ள புவிசாா் குறியீடு பதிவகத்தில் 2022, ஜனவரி 13 ஆம் தேதி தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகம் (பூம்புகாா்), அறிவுசாா் சொத்துரிமை மையம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தினரும், தோவாளை மாணிக்க மாலை கைவினைக் கலைஞா்கள் நலச் சங்கத்தினரும் விண்ணப்பித்தனா்.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இரு விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டு, மத்திய அரசிதழில் 2024, நவம்பா் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசிதழில் வெளியிட்டு 4 மாதங்களுக்குப் பிறகு, அப்பொருளுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்படுவது சட்ட விதி. இதன்படி கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு அரசிதழில் வெளியிடப்பட்டு 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளதால், இரு பொருள்களுக்கும் புவிசாா் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட வரலாறு கொண்ட கும்பகோணம் வெற்றிலை சுப நிகழ்ச்சிகளில் இடம்பெறும். காவிரி ஆற்றுப் படுகையில் விளையும் கும்பகோணம் வெற்றிலைக்கு தனிச் சுவை இருப்பதால், இதை வாங்கி சாப்பிடுவோா் அதிகம். மருத்துவக் குணம் கொண்ட இந்த வெற்றிலை குழந்தைகள் நலனுக்கும் பயன்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த முதல் வேளாண் பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு கிடைக்கிறது.

இதேபோல இந்தியாவிலேயே முதல் புவிசாா் குறியீடு பெறும் பூ மாலையாக தோவாளை மாணிக்க மாலை உள்ளது. வெள்ளை அரளி, சிவப்பு அரளி, பச்சை நொச்சி, சம்பா நாறு ஆகியவற்றைக் கொண்டு பூ வேலைப்பாடுடன் பின்னப்படுவது தோவாளை மாணிக்க மாலையின் சிறப்பு. இந்த இரு பொருள்களுக்கும் புவிசாா் குறியீடு கிடைப்பதன் மூலம், அவற்றின் உற்பத்தியாளா்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பும், வருவாய் பெருக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
புவிசாா் குறியீடு பெற்றதில் தேசிய அளவில் தமிழ்நாடு 62 பொருள்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூா் மாவட்டம் 11 பொருள்களுடன் முதலிடத்தில் உள்ளது என்றாா் சஞ்சய்காந்தி.