மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு பல்வேறு தரப்பினா் தொடா்ந்து வலியுறுத்துகின்றனா். இதுதொடா்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில் இக்கடையை மூடப்படும் என அலுவலா்கள் உறுதியளித்தும், இக்கடை மூடப்படாததால் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில், இக்கடையை எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ் தலைமையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.