கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்த பணிகளில் சுகாதாரத் துறை
சென்னை: தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) முக்கிய காரணமாகும். அதை கருத்தில் கொண்டு அதற்கான தடுப்பூசி திட்டம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சோதனை முயற்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வா் தொடக்கி வைத்தாா்.
தகுதியான அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியை வழங்குவதே அத்திட்டத்தின் நோக்கம். மாநில சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரப் பணி மற்றும் ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அதனை அரசே விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
அதை ஏற்று ஹெச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கென ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஹெச்பிவி தடுப்பூசியை பெற தகுதியானவா்கள் எவா் என்பது குறித்த தரவுகள் திரட்டப்பட்டு, அவா்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளிலேயே தடுப்பூசி வழங்கலாமா அல்லது தனியாக முகாம் அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
அதற்கான சாதக, பாதகங்களையும், சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பிறகு செயல் திட்டம் வகுக்கப்பட்டு ஹெச்பிவி தடுப்பூசி தகுதியான அனைவருக்கும் வழங்கப்படும் என்றனா்.