என் கேள்விக்கென்ன பதில்? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒவ்வொரு நாளும் பல கேள்விகளுடன் பொழுது விடிகிறது. அனைவர் உள்ளும் அன்றைய நாளுக்கான கேள்விகள் அவரவர்களை தட்டி எழுப்பி பதில் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஒரு சில கேள்விகளை தவிர பல கேள்விகள் கண்டுகொள்ளாமலே விடப்படுகின்றன. கேள்வி - பதில்கள் சூழ்ந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கேள்வி பதில் நிறைந்ததே வாழ்க்கை.
"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி...
--------------------------------------------------------------
" காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்பும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்..." -என்று
கவியரசர் அபூர்வ ராகங்கள் படத்தில் அழகாகப் பாடி இருப்பார். இன்பம் அதிகமாக வரும்போது இது நிலைத்திருக்குமா என்ற கேள்வியும்... துன்பம் அதிகமாக வரும்போது ஏன் எனக்கு மட்டும் என்ற கேள்வியும் பிரதானமாக இருக்கும்.
அதே படத்தில் 'கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதையா...? என்று இன்னொரு பாடலும் இருக்கும். படத்தின் திருப்புனையாக அமைந்த பாடல்.

"என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய
மருகளின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால் எனக்கும்
அவருக்கும் என்ன உறவு...?" - இந்த பெரிய புதிர் கேள்வி தான் படத்தை ஆக்கிரமித்திருக்கும். இறுதியாக விடை தெரிந்து அவரவர் பாதையில் பயணிப்பார்கள்.
"கேள்விக்கென்ன பதில்... என் கேள்விக்கென்ன பதில்..உன் பார்வைக்கென்ன பொருள்...?" - என்று அழகான காதலுக்கு அழகான கேள்விகள் மூலம் காலத்தை வென்ற பாடலைத் தந்தார் கவிஞர் வாலி.
"பத்துக்கு மேலாடை... என்று காதலன் கேள்வி கேட்க பதில் தெரியாத காதலி ஆ...ஆ... என்று ராகம் பாட...பதினொன்றே ஆகும் என்று அவனே பதிலையும் சொல்வான். "விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்" - நாணல் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எழுதியவர் கவிஞர் சுரதா அவர்கள்.
"கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..." - என்று இது ஒரு பொன்மாலைப் பொழுதில் அறிமுகமாகி அசத்தினார் கவிப்பேரரசு. திரையுலகில் பல கேள்விகள் பாடலில் இடம்பெற்று புதுப்புது பதில்களை தந்தன.

கேள்விகள் பல வகைப்படும். சாதாரண கேள்வி, அசாதாரண கேள்வி, இலக்கிய கேள்வி ஆன்மீகக் கேள்வி, காதல் கேள்வி, அனல் பறக்கும் கேள்வி, அரசியல் கேள்வி.. விகடனின் பிரபலமான "நானே கேள்வி...நானே பதில்..." இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
எல்லா கேள்விகளுக்குள்ளும் ஒன்று மறைந்திருக்கும். அதைப் புரிந்து கொண்டு பொருத்தமான பதில் அளிப்பவர் ஒரு சிலரே. கேட்பவரை பொறுத்து, கேட்கும் விதத்தை பொறுத்து, சூழ்நிலையைப் பொருத்து அது மாறுபடும். பிரபலமானவர்களை பேட்டி எடுப்பவர்கள் கேட்கும் கேள்விகள் திணறடிக்கும் வகையில் இருக்க வேண்டும். முதல்வன் படத்தில் அர்ஜுன் ரகுவரனை பேட்டி எடுக்கும் காட்சியை நினைத்துப் பாருங்கள். அது போல இருக்க வேண்டும்.
பத்திரிகைகளில் கேள்விகள் மட்டுமே கேட்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். சிலர் பிரபல எழுத்தாளர்களை விட படிப்பவர்கள் மனதில் இடம் பெற்று இருப்பார்கள்.
அந்நியன் படத்தில் சுஜாதா அவர்கள் அப்படி எழுதிய ஒருவர் பெயரை பயன்படுத்தி இருப்பார். அவர்தான் அயன்புரம் சத்தியநாராயணன். நிறைய கேள்விகள், விமர்சனக் கடிதங்கள் எழுதி உள்ளார். மிகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் மனதில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர் வசனம் எழுதிய ஒரு பிரம்மாண்டமான படத்தில் அந்த பெயரை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய விஷயம். கேள்வி கேட்பது சுலபமல்ல.
தினசரி செய்திகளை படித்தால் மட்டுமே அது சாத்தியம். சில அரசியல் இதழ்கள் மற்றும் வார இதழ்களில் பம்பர் பரிசு, சிறப்பு பரிசு, ஆறுதல் பரிசு தருகிறார்கள். கேள்விகளின் முக்கியத்துவத்துவம் தெரிந்ததால்தான் அப்படி தருகிறார்கள்.

"பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா...?" - ஒரு மன்னனின் மனதில் எழுந்த கேள்வி எவ்வளவு பெரிய இலக்கிய மோதலை தருமி என்ற ஏழை புலவன் மூலமாக நடந்ததை திருவிளையாடல் படத்தில் பார்த்தோம்.
வந்திருப்பது இறைவன் என்று தெரிந்தும் தமிழ் மேல் உள்ள பற்றின் காரணமாக 'எழுதிய நீர் இருக்க வேறு ஒருவரிடம் கொடுத்தனுப்பிய காரணம்...?' என்று கேட்ட நக்கீரரின் துணிச்சலையும் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறோம்.
ஒரு கேள்வி பல நல்ல விஷயங்களை வெளியே கொண்டு வரும். ஆப்பிள் எப்படி கீழே விழுந்தது என்ற கேள்வி 'புவியீர்ப்பு விசை பற்றி நியூட்டன் விதி உருவாக காரணமாக இருந்தது.
"கோடு போட்டு நிற்கச்சொன்னான் சீதை நிற்கவில்லையே..." - என்ற கேள்வியை கவியரசர் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் எழுப்பி... 'சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே..." என்ற பதிலையும் தந்து முழு ராமாயணத்தையும் ஒற்றை வரியில் சொல்லி இருப்பார்.

"நான் யார்... நான் யார்... நாலும் தெரிந்தவர் யார்... யார்...?" -புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இப்படி ஒரு கேள்வியை தனது முதல் பாடலில் நம் முன் புரட்சித்தலைவர் மூலமாக வைத்தார். நான் யார்... நாம் ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி.
அதற்கான பதில் நான் இன்னாரின் மகன் இன்னாருடைய கணவன்... அண்ணன்... தம்பி... அப்பா...என்று சொன்னால் அது சரியான பதில் அல்ல. உள்ளே புதைந்திருக்கும் அந்த 'நான்' பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். மனம் சார்ந்த அந்த' நான்' தான் உலகுக்கு நம்மை அடையாளப்படுத்தும்.
மனம் அழகாக இருந்தால்' நான்' அழகாக இருக்கும். மனம் அறிவு பூர்வமாக சிந்தித்து கொண்டு இருந்தால் 'நான்' அறிவாளியாக இருக்கும். நாலும் தெரிந்தவர் என்றால் என்ன.
எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவரே நாலும் தெரிந்தவர். நாளும்... நாலும் தினசரி வாழ்க்கையில் இணைந்து பயணிக்கும்... இலக்கிய கூட்டம், ஆன்மீக சொற்பொழிவுகள், போன்றவைகள் நடக்கும் இடங்களுக்கு சென்றால் நாலு நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நல்ல நாளில் நல்ல நாலு விஷயங்களை கேட்க வேண்டும்.
அந்த நாலு விஷயங்களில் எல்லாம் அடங்கும். அந்த நாலும் தெரிந்தவர் யாரென்று புலவர் கேட்கிறார். நமக்கு மேலே இருந்து நம்மை இயக்கும் சக்திக்கு மட்டுமே அது தெரியும்.
அதைத்தான் இறைவன் என்கிறோம்.

கேள்விகள் நம்மை இயக்குகின்றன. மனம் நமக்கான கேள்விகளை உருவாக்குகிறது. அதே மனம் தான் அதற்கான சிறந்த பதிலை கண்டுபிடித்து தருகிறது. மனம் தான் இயக்குநர். நாம் பேசும் வசனங்களை உடனுக்குடன் தருவதும் அந்த இயக்குநர் தான்.
சிறந்த இயக்குநர் சிறந்த மனிதனை உருவாக்குகிறது. கணக்கு வருமா... வராதா என்ற கேள்விக்கு வராது என்ற பதிலை எனது மனம் நான் சிறுவயதாக இருந்தபோது சொல்லி இருக்க வேண்டும்.
கல்லூரி முடிக்கும் வரையில் வராது என்ற நினைப்பினிலே படித்துக் கொண்டு இருந்தேன். கணக்கு என்னை விட்டு விலகவில்லை. M.A. படிக்கும் போதும் வந்தது. அப்போதுதான் புரிந்தது அது எனக்கு எதிரியல்ல, நண்பன் என்பதை.
அந்த நண்பன் என்னை நான் விரும்பிய கணக்கு போடும் வங்கிப் பணிக்கு அழைத்து சென்று அமர வைத்தது.
34 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்று கணக்கோடும் கணக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களோடும் நட்போடு இருக்கிறேன். வராது என்று நீங்கள் ஒதுக்கிய விஷயங்கள் உங்கள் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டே இருக்கும்... உள்ளே வரலாமா என்ற கேள்வியோடு... அந்த கேள்விக்கு சற்று செவி சாயுங்கள்...அதோடு நட்பு பாராட்டுங்கள்... பல இடங்களில் உங்கள் புகழ் நிமிர்ந்து நிற்கும்!
-திருமாளம் எஸ். பழனிவேல்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.