`தூர்வை.. கூகை.. அன்னஉத்திரம்'- வழக்கொழிந்த கிராமத்து சொற்கள் குறித்து விவரித்த எழுத்தாளர் சோ.தர்மன்
கரிசல் மற்றும் கண்மாய் எழுத்தாளர் சோ.தர்மன், பெரியார் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில், மக்கள் வாழ்க்காற்றுத் தொடர்பியல் என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் நேற்று முன்தினம் (20.03.2025) நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் குறும்பனை சி. பெர்லின் மற்றும் சூளூர் ஆனந்தி ஆகிய இருவரும் கரிசல் எழுத்துக்களையும்... கொங்கு வட்டார சொற்களைப் பற்றியும் அந்த மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியும் பேசினார்கள். இதில் குறும்பனை சி.பெர்லின், `கரிசல் இலக்கியங்கள் கொட்டி கிடக்கிறது, இளைஞர்களான நீங்கள் தான் எல்லாவற்றையும் மீட்டு எடுக்கவேண்டும்' என்று கூறினார்.
நேற்றைய (21.03.2025) முதல் அமர்வில் சாகித்யா அகாடமி விருது பெற்ற கரிசல் மற்றும் கண்மாய் எழுத்தாளர் சோ.தர்மன், தனது உரையை மாணவரகள் மத்தியில் உற்சாகத்துடன் ஆரம்பித்தார்.

அவர் பேசியதாவது, ``தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் சென்றுவிவிட்டேன். பெரியார் பல்கலைக்கழகம் வருவது இதுவே முதல் முறை. எனக்கு இந்த வாய்ப்பளித்த பேராசிரியர் மா.தமிழ்பரிதி அவர்களுக்கும் இதழியல் துறை பேராசிரியருக்கும், வருங்கால பத்திரிகையாளராக வரும் மாணவர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் என்னை நானே பெருமைப்படுத்திக் கொள்கிறேன். நான் இன்று உங்கள் முன்பு பேசுகிறேன் என்றால், அதற்கான இடத்தில் இப்போது நான் இருக்கிறேன்.
14 முறை சிறை சென்று இருக்கிறேன். 25 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். இன்றளவும் விவசாயம் செய்து வருகிறேன். எனது ஆசானான கி. ராஜநாராயணன் அவர்களைப் படித்தேன். என்னுடைய கதைகளை உற்சாகமூட்டும் வகையிலும் ஆச்சர்யமூட்டும் வகையிலும் நான் எழுதினேன் . நான்கு முதலமைச்சரிடம் விருது வாங்கியுள்ளேன். கலைஞர் இல்லம் 2 கோடியில் எனக்குக் கொடுக்கப்பட்டது. எனது எழுத்துக்கள் பல பல்கலைக்கழகத்தில் உள்ளது. என்னை நான்தான் தகுதிப்படுத்திக் கொண்டேன், மேம்படுத்திக் கொண்டேன், அதனால்தான் இன்று நான் உங்கள் முன்பு நின்று பேசுகிறேன்.
தொடர்பியல் துறையில் உங்களை நீங்கள் மேம்படுத்த, பல தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். கிராமத்து வழக்குச் சொற்கள், கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றைத் தூக்கிப் பிடிக்கிறது. நான் எழுதிய நாவல்களின் தலைப்புகளையும் அதன் அர்த்தங்களையும் கூறுகிறேன்.
தூர்வை - என்றால் என்ன சொல்லுங்கள்?
சுத்தமான தமிழ்ச் சொல், அழிந்து போன சொல். அழிந்து மட்டும் கொட்டிக்கிடக்கிற ஓர் இடத்தை தூர்வை என்று அழைக்கலாம். உதாரணமாக, அந்த ஊருக்கு ஒரு ஒத்தடி பாதை இருந்துச்சி, இப்போ ரோடு போட்டதால் பழைய பாதை தூர்ந்து போயிருச்சு இதான் அர்த்தம்.
அடுத்ததாக கூகை, திருக்குறளில் திருவள்ளுவர் பயன்படுத்திய ஒரு பறவையே கூகை. அடுத்து 2019-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் சூல் என்றால் என்ன? ஈருசுருகாரி நிரை மாசம் சூழ்ந்த ஒரு பெண், சூல் நிறைந்த பெண் என்று பொருள்.
இந்த மாறி நிறையச் சொற்கள் டெக்னாலஜி வளர்ச்சியால் அழிந்து விட்டது.
அன்னஉத்திரம் என்றால் என்ன?
இன்றும் பலர் ஊர்களில் அரங்கேறிக்கொண்டிருக்கும் பெண்களுக்கான உரிமை பிரச்னையே இது. நான்கு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள் சொத்தை பிரித்து கொடுங்கள் என்கிறார்கள். தீர்ப்பு பஞ்சாயத்துக்கு போகிறது... இப்படி பசங்க பங்கு கேக்குறாங்க. என்ன சொல்றப்பா என்கிறார்கள் சரி கொடுக்கிறேன் இனி என்னால் உழைக்க முடியாது என்கிறார் அப்பா.
ஊர் பொதுமக்கள் கூடிச் சரி கொடுத்துவிடலாம், உனக்கு என்ன வேண்டும் என்று சொல் என்கிறார்கள். எனக்கு தோட்டத்தில் அரை ஏக்கர், வீட்டில் ஒரு இரண்டு ஏக்கர் கொடுத்துருங்க, மீதி எல்லாம் பகிர்ந்துக்கிட்டும்... எனக்கு வேண்டாம் என்கிறார். அந்த பங்கு வாங்கிய இடங்களுக்குப் பெயர் தான் அன்னஉத்திரம்.
பெண்கள் குலவையைப் பற்றிச் சொல்லுங்கள் யாராவது... 1801 ல் ஊமதுரை கோட்டையில் பெண்களை வைத்து நடத்திய குலவையில் யுத்தத்திற்கு வந்த ஆங்கிலேயர்கள் ஏதோ நம்மகிட்ட இல்லாத பெரிய பீரங்கி ஒன்று வைத்துள்ளான் ஊமதுரை என்று பயந்து நகர்ந்துவிட்டார்கள். இப்படி ஓவ்வொரு வார்த்தையும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

ஒப்பாரியை எல்லோரும் மறந்து விட்டோம்.
அவர்களுக்கு இருக்கும் பிரச்னையை கொண்டுவந்து சாவு வீட்டில் அழுவதே ஒப்பாரிக்கு உகந்த அர்த்தம். விருந்தோம்பல் இன்றும் பல கிராமங்களில் வேற அர்த்தங்களில் இருக்கிறது. எங்க வீட்லலாம் சாப்டுவியா நீ!! என்றால் வீட்டில் சாப்பாடு இல்லை என்று அர்த்தம். விருந்தோம்பலுக்கு உதாரணமாகச் சீதை மற்றும் கண்ணகியைக் கூறலாம்.
மொய் வைப்போம் பல விசேஷங்களில், இதற்கு இன்னொரு அர்த்தம் உண்டு. 21 ஆடுகள் சேர்ந்தால் ஒரு மொய் எனக் கூறலாம். இப்படியே சொல்லப்போனால் போய்க் கொண்டே இருக்கும். என் அனுபவத்திலிருந்து ஒரு விஷயம் கூறுகிறேன். உங்கள் பதிவுகள் பொதுநோக்குடைய விஷயங்கள், இலக்கியங்கள் அனைத்தையும் முகநூலில் பதிவு செய்யுங்கள். அது நிறையத் தாக்கத்தை ஏற்படுத்தும். வருங்காலங்களில் சிறந்த பத்திரிகையாளராக எழுத்தாளராக வர வேண்டும். எனக்கு வாய்ப்பளித்த பேராசிரியர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்" என்றார்.
இதழியல் பேராசிரியர் முனைவர். மா.தமிழ் பரிதி நன்றியுரை கூறி நிகழ்வை முடித்தார்.