`கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்' - ரஜினி வெளியிட்ட வீடியோ! காரணம் என்ன?
மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த மார்ச் 7 ஆம் தேதி குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலிருந்து இரு பிரிவுகளாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி தொடங்கியது. இதனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்திலிருந்து காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். மேற்கு வங்கத்தில் தொடங்கிய பேரணி 25 நாள்கள் கடந்து வரும் 31 ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் நிறைவடைய உள்ளது.

கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க, கடலோரம் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தான் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோரசம்பவங்கள் செய்வார்கள்.
அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிவிட்டது. கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எஃப் வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்களின் பகுதிகளுக்கு வரும்போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று வாருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
