சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
`என் வேலையை காலி பண்ணி விட்டுடுவீங்க போல' என்றார் வடிவேலு சார் - நடிகை ராதா பேட்டி
23 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிற முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'. இப்போதும் ஓட்டை ஒடிசலான ஒரு பேருந்தைக் கண்டால் “என்னது சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸு மாதிரி இருக்கு” என்றுதான் கிண்டலடிக்கிறார்கள்.
அப்படித்தான், சமூகவலைதளங்களில் இப்போதும் மீம்ஸ் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முரளி, வடிவேலு, ராதா கூட்டணியில் ஒரு பேருந்தை மையமாக எடுத்து வெளியான இப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. அதுவும், சென்டிமென்ட், சீரியஸ் என உணர்வுப்பூர்வமாக நடிக்கும் முரளிக்குள் இவ்வளவு காமெடி சென்ஸ் இருக்கா? என தமிழ் சினிமா ரசிகர்களைப் பிரமிக்கவைத்து, 'இதய நாயகன்' முரளியை காமெடி ட்ராக்கில் பயணிக்க வைத்த படம். தற்போது, இதன் இரண்டாம் பாகமான 'சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் ஃபாஸ்ட்' கருணாஸ் - கருணாகரன் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் நாயகி ராதாவிடம் பேசினேன்.
“இத்தனை வருடங்கள் ஆனாலும் 'சுந்தரா டிராவல்ஸ்' இப்போ ரிலீஸ் ஆன மாதிரிதான் இருக்கு. நான், தெலுங்குல ரெண்டு படம் நடிச்சிருந்தாலும் தமிழ்ல என்னோட முதல் படம் 'சுந்தரா டிராவல்ஸ்' தான். முதல் படமே ஹிட் அடிச்சது, பெரிய ஆசீர்வாதம். எல்லோரும் வாய்ப்பு கிடைக்க ரொம்ப க்ஷ்டப்பட்டதா சொல்வாங்க. அப்படி, நான் எந்த கஷ்டமும் படல.
பி.ஆர்.ஓ மூலமா ஆடிஷன் போனேன். தயாரிப்பாளர் எஸ்.வி தங்கராஜ் பார்த்தவுடனேயே இவங்க கரெக்ட்டா இருப்பாங்கன்னு செலக்ட் பண்ணிட்டார். மூணே நாட்களில் ஷூட்டிங் போயிட்டேன். எல்லாமே ரொம்ப ஈஸியா அமைஞ்சது. முரளி சார், ரொம்ப நல்ல மனிதர். மரியாதைக்குரியவர். எனக்கு தமிழில் முதல் படம் என்பதால் நான் எதுவும் நெர்வஸ் ஆகிடக்கூடாதுன்னு ரொம்ப கம்போர்டபிளா இருக்க வெச்சார். பஸ்ஸுல அடிக்கிற சீன் வரும். அப்போ தெரியாம அவர் மேல வேகமா பட்டுட்டுச்சு. ஆனா, இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகேன்னு ரொம்ப கூலா எடுத்துக்கிட்டார். ஆனா, அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுல ஒரு காலேஜ் சீனியர் மாதிரிதான். ராக்கிங் எல்லாம் பண்ணுவார்.
அதேமாதிரி, பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி பழகினார் வடிவேலு சார். ரொம்ப எதார்த்தமா எளிமையா உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பார். 'எங்கம்மாக்கிட்ட இந்த பொண்ணுக்கு நல்ல முகம்… நல்லா வரும்'னு பாராட்டிக்கிட்டே இருப்பார். ஷூட்டிங்குல வடிவேலு சார்கூடதான் அதிகமா உட்கார்ந்திருப்பேன். நிறைய சொல்லிக்கொடுப்பார். ஒவ்வொரு காமெடி காட்சியையும் நாங்க பேசி வெச்சுக்கிட்டு பண்ணுவோம். அது, ரொம்ப கலகலப்பா இருக்கும்.
நான் வடிவேலு சார்க்கூடத்தான் உட்கார்ந்து சாப்பிடுவேன். அப்போ, முரளி சார்தான் காலேஜ் சீனியர் மாதிரின்னு சொன்னேனே! வடிவேலு சார்கூட உட்கார்ந்து சாப்பிடும்போது, எங்களைப் பார்த்து ஒரு முறை முறைப்பார். அது, செம்ம சிரிப்பா இருக்கும். நான், சிரிச்சதும் பக்கத்துல இருக்கிற வடிவேலு சார், “ஏம்மா என் வேலையை காலி பண்ணி விட்டுடுவீங்க போலயே?"ன்னு கிண்டலா கேட்பார். அந்த அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட் செம்ம ஜாலியா போச்சு. இன்னொரு பக்கம், இந்தப் படத்துல நாலாவது முக்கியமான ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் இருந்தார். அவர்தான், எலி. அந்த படத்துல வர்ற காட்சிகள் பலரும் கிராஃபிக்ஸுன்னு நினைச்சுக்கிட்டிருப்பீங்க. அதெல்லாம், கிடையாது.
ரியலான எலியைத்தான் பயன்படுத்தினாங்க. அவர் வேற, ஷூட்டிங் ஸ்பாட்டுல குறுக்க நெடுக்க ஓடிக்கிட்டு ஓடியாந்துக்கிட்டும் கிடப்பார். அவரோட அலப்பறை தாங்கவே முடியாது. அவருக்கு, பார்த்துக்கிறதுக்கு ஒரு அஸிஸ்டென்ட். அவருக்கு தனி ஃபுட்டுன்னு அவர் பண்ணின பில்டப்பும் செம்ம காமெடியா இருக்கும். திறந்து விட்டதுமே பாய்ஞ்சு எங்களை நோக்கித்தான் ஓடி வருவார். எப்படியோ அந்த எலியை வெச்சு ஷூட்டிங்கை முடிச்சிட்டாங்க. மகாபலிபுரம், பரங்கிமலைன்னு ஷூட்டிங் எடுத்தாங்க. பரங்கிமலையில எடுத்தது ரொம்ப கஷ்டம். அப்போ, ஏப்ரல் மாசம். பயங்கர வெயில். அதையெல்லாம் மறக்கவே முடியாது.
இப்போ, 'சுந்தரா டிரவல்ஸ் 2' எடுத்துக்கிட்டிருக்காங்க. சுந்தரா டிராவல்ஸ் தயாரித்த தங்கராஜ் சார்தான் 'சுந்தரா டிராவல்ஸ் 2' படத்தையும் தயாரிக்கிறார். எலிக்கு பதிலா இன்னொருத்தர் வர்றார்” என்று சஸ்பென்ஸ் வைத்தவரிடம், “நீங்களும் அந்த படத்துல நடிக்கிறீங்களா?” எனக் கேட்டேன். “ 'சுந்தரா டிராவல்ஸ் 2' எடுக்கிறது ரொம்ப பெருமையா இருக்கு. இப்படி, ஹிட் படங்களை பார்ட்-2 எடுக்கிறது பாராட்டுக்குரிய விஷயம். எட்டு வருடங்களுக்கு முன்னாடியே 'சுந்தரா டிராவல்ஸ் 2' எடுக்கிறதுல நான் நடிக்க வேண்டியிருந்தது. ட்ரெஸ் எல்லாம் கொஞ்சம் சேஞ்ச் பண்ண சொன்னாங்க. அதனால, நான் நடிக்கல. இப்போ, திரும்ப ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஆனா, அம்மா கேரக்டர். அதனால, நான் வேணாம்னு சொல்லிட்டேன்.
'சுந்தரா டிராவல்ஸ்' படத்துல நான் ஹீரோயினா நடிச்ச பெருமையே எனக்கு போதும். ஆனா, தயாரிப்பாளர் தங்கராஜ் சார் இப்போதும் என்கிட்ட நல்லா பேசுவார். பெயருக்கேற்றமாதிரி தங்கமான மனிதர். இப்போதும் நான் என்ன உதவி கேட்டாலும் செய்யக்கூடியவர். 'சுந்தரா டிராவல்ஸ் 2' படமும் அவருக்கு நல்ல ஹிட் கொடுக்கும். நல்ல டீம் இறங்கியிருக்காங்க” என்றவரிடம் “உங்களுடைய பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்துட்டீங்களா?" என்றோம், “அதை எல்லாம் இப்போ நினைச்சா எனக்கு சிரிப்பா வருது. எல்லாத்திலிருந்தும் மீண்டு வந்து இப்போதான் நிம்மதியா இருக்கேன். சினிமாவுல கவனம் செலுத்துறது மட்டும்தான் என்னோட குறிக்கோள். நல்ல, கதைகளில் நடிக்கணும்னு ஆர்வமா இருக்கேன். இப்போதைக்கு, ‘வெட்டு’ ங்குற படத்துல நடிச்சிருக்கேன். சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுது. நல்ல படங்கள் வந்தா நிச்சயமா நடிப்பேன்” என்கிறார், புன்னகை மாறாமல்!