ராணுவத்தில் வேலை வேண்டுமா? - உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!
'வேள்பாரி’ நாயகன் சு.வெங்கடேசன் - சில குறிப்புகள் | பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு
மேடைகளில் கவிஞராக...
தமிழ் இலக்கிய வரலாற்றில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்நாவல் குறித்து பலரும் சிலாகித்து பேசுவதைக் காணமுடியும். அதற்குச் சற்றும் குறைவில்லாத, படித்தவர்கள் யாவரும் வியந்து போற்றும் மற்றொரு நாவல் ‘வீரயுகநாயகன் வேள்பாரி’. விகடனில் தொடராக வெளியாகி பின்னர் 2019-ல் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியாகி இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த நாவலை எழுதியவரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனின் பிறந்தநாள் இன்று.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த சு.வெங்கடேசன் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். எனினும் சிறுவயது முதலே எழுத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி நாட்களில் ‘ஓட்டையிடாத புல்லாங்குழல்’ என்ற கவிதை தொகுப்பின் மூலம் கவனம் பெற்றார். மேலும் ‘திசையெல்லாம் சூரியன்’, ‘பாசி வெளிச்சத்தில்..’, ‘ஆதிப் புதிர்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கோட்பாடு...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகிய சு.வெங்கடேசனுக்கு, அதன் வழியாக மார்க்ஸிய இலக்கியங்கள், கோட்பாடுகள் அறிமுகமாகின. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினார்.

தவிர, மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த ஏராளமான போராட்டங்களிலும் களத்தில் நின்றுள்ளார். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் இவரது பங்கு முக்கியமானது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன் மாநிலத் தலைவராகவும் உயர்ந்தார். 2019 மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில், மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்டு, 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றியைத் தக்கவைத்தார்.
‘காவல் கோட்டம்’ நாவல்...
‘கலாசாரத்தின் அரசியல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள சு.வெங்கடேசன், அதற்கான குறிப்புகளைச் சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு அரசாணை ஒன்று கிடைக்கிறது. அதாவது ‘கிராமக் காவல்’ முறை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறதா என்பது குறித்து அப்போதைய சென்னை மாகாணம் முழுக்க மாவட்ட ஆட்சியர்களிடமும், எஸ்.பி-க்களிடமும் சென்னை கவர்னர் அறிக்கை கேட்கும் அரசாணைதான் அது.

அதை நூல் பிடித்து பிரிட்டிஷ் அரசுடன் மோதிய இனக்குழுக்கள், பழங்குடி மக்கள், உள்ளூர் சமூகங்கள் குறித்த பல்வேறு தகவல்களைச் சேகரிக்கும் சு.வெங்கடேசனின் சிந்தனையில் உதிக்கிறது ‘காவல் கோட்டம்’ நாவல்.
1998-ல் தொடங்கிய இந்த நாவலுக்கான பணி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீளும் இந்த நாவலுக்கு 2011-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த நாவலின் ஒரு பகுதியை இயக்குநர் வசந்தபாலன் ‘அரவான்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்.
வீரயுக நாயகன் வேள்பாரி...
ஆனந்த விகடன் வார இதழில் 2018-ஆம் ஆண்டு வீரயுக நாயகன் வேள்பாரி என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுத தொடங்கினார் சு.வெங்கடேசன். வேள்பாரியை எழுதத் தொடங்கிய அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் சு.வெ: “பாரியைப் பற்றி அறிந்துகொள்ள பறம்பேறிய கபிலர் உடனே நானும் பயணித்தேன். பறம்பையும் பாரியையும் அறிதலில் அவர் வியந்ததைப் போன்றே நானும் வியந்தேன். பாரியின் அன்பிலும் அறத்திலும் கட்டுண்ட பெரும்புலவர் போன்றே நானும் கட்டுண்டேன். பறம்பின், பறம்புத்தலைவனின் இயற்கை அறிவையும் வீரத்தையும் அணு அணுவாக ரசித்து மயங்கிக் காதலில் விழுந்தேன். ஆம் இதுவும் காதல்தான்!”

சங்க காலங்களில் குலச் சமூகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, அழிந்து, வென்று நிலைகொண்ட காலத்தை வீரயுகக் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கின்றனர். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் குறுநில மன்னனான பாரியோடு தனித்தனியாகப் போரிட்டுத் தோல்வியைத் தழுவுகின்றனர். மூவரும் இணைந்து போரிட்டும் தோல்வியைத் தழுவுகின்றனர். இத்தகைய தமிழ் வீரயுகக் காலத்தில் பாடப்பட்ட வள்ளல் பாரியே தமிழ்ப் பேரிலக்கியத்துக்கான மாவீரன் என்பதால் தனது தொடருக்கு ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ என்று பெயர் சூட்டினார் சு.வெங்கடேசன்.
சங்க கால வரலாற்றை சமகால வாசகருக்கு...
முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் என்ற அளவிலேயே பாரியைப் பற்றி தெரிந்து வைத்திருந்த தமிழ் வாசகர்களுக்கு, பாரியின் வியக்க வைக்கும் ஆளுமையைத் தனது படைப்பின் மூலம் கொண்டு சேர்த்தவர் சு.வெங்கடேசன் என்றால் அது மிகையல்ல. சங்க கால வரலாற்றை சமகால வாசகனுக்கும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், எப்படித் தொடங்குவது, எப்படி முடிப்பது என்பதுவரை அனைத்திலும் கடுமையான உழைப்பு தேவை. சிறிதி பிசகினாலும் நாவல் ஆய்வுக் கட்டுரையாக மாறிவிடும்.
இதற்காக சங்க இலக்கியங்களை ஆழமாக ஆராய்ந்து, தொடர்புடைய நிலப்பரப்புகளில் பயணம் செய்து, ஏராளமான மனிதர்களைச் சந்தித்து, வரலாற்றுத் தரவுகளைத் திரட்டி ஒரு மிகப்பெரிய பளு நிறைந்த பணியை மேற்கொண்டு ‘வேள்பாரி’யை வடித்தார். வெறுமனே சிந்தனையில் தோன்றியவற்றை மனம்போன போக்கில் எழுதிவிடாமல், நாவலில் வரும் உரையாடல்கள், சொற்பிரயோகங்கள், மூலிகைகள், வானியற் செய்திகள் என அளப்பரிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
நாவலில் ‘வேந்தர்களும் வேளிர்களும்’ என்று ஒரு சொற்றொடர் வருகிறது. வேந்தர்களுக்கு இணையாக வேளிர்கள் குலம் இருந்துள்ளதை இது குறிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்க இந்த வேளிர் கூட்டம் வாழ்ந்துள்ளனர். வேளிர் குலங்களை அழித்தே சேர, சோழ, பாண்டியர்கள் தம்மை நிலைநிறுத்தியதை ‘வேள்பாரி’ முக்கியமாகப் பேசுகிறது.

இதுபோன்ற அரிய வரலாற்று தகவல்களைப் புனைவு பின்னணியில் படிப்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்னுடைய சீரிய எழுத்தின் மூலம் ‘வேள்பாரி’யை இயற்றினார். மேலும் இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் கதையே வேள்பாரி. வரலாற்று பின்னணி கொண்ட கதையென்றாலும், இதை நாம் இப்போதையே கார்ப்பரேட் யுகத்துடனும் பொருத்திப் பார்க்க முடியும்.
சமூக பிரச்னைகளைத் தனது திரைப்படங்களில் தொடர்ந்து பதிவு செய்து வரும் ஷங்கரின் கவனத்தை ‘வேள்பாரி’ ஈர்த்ததில் ஆச்சர்யமில்லை. கொரோனா காலகட்டத்தில் எதேச்சையாக எடுத்துப் படிக்க தொடங்கிய தன்னை எங்கும் நகரவிடாமல் செய்துவிட்டதாக ஷங்கர் கூறியிருந்தார். தற்போது ‘வேள்பாரி’யின் உரிமையைக் கைப்பற்றவும் செய்திருக்கிறார். ஹாலிவுட்டில் நாம் பார்த்து வியந்த ’கிளாடியேட்டர்’, ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போன்ற பிரமாண்ட படைப்புகள் யாவும் புத்தகங்களில் இருந்து திரைக்குக் கொண்டு வரப்பட்டவையே.
பிரமாண்டத்துக்குப் பேர் போன ஷங்கர், ஒரு நல்ல திரைக்கதை குழுவுடன் சேர்ந்து ‘வேள்பாரி’யை ஒரு திரைப்படமாகவோ அல்லது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போன்ற ஒரு நீண்ட வெப் தொடராகவோ கொண்டு வந்தால் நிச்சயம் அது உலக சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.























அரசியல் பயணம்:
சு.வெங்கடேசனின் எழுத்துப் பயணம் இப்படியென்றால், அவரின் அரசியல் பயணமும் குறிப்பிடத்தக்கது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் 17-வது எம்.பி-யாக வெற்றி பெற்ற சு.வெங்கடேசன், தனது தொகுதிக்காக மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கொரோனா காலகட்டத்தில், ‘மாமதுரையின் அன்னவாசல்’ என்ற பெயரில், மதுரையில் பல இடங்களில் உணவுக்கூடங்களை அமைத்து, பலரிடமும் நன்கொடைகளைப் பெற்று ஏழை, எளிய மக்களுக்கு இரண்டு மாத காலம் தொடர்ந்து உணவளிக்க உதவினார்.
மதுரை - தேனி - போடி வழித்தடத்தில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், தாம்பரம் - செங்கோட்டை இடையிலும், திருவாரூர்-காரைக்குடி வழியாகவும் வாரம் மூன்று முறை விரைவு ரயில் விடவும், மதுரை - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி ரயில் வழித்தடத் திட்டத்துக்கு 114 கோடி ஒதுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டார்.
மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாகத் தரம் உயர்த்த, தொடர்ந்து போராடி அந்த கோரிக்கைக்கு மத்திய அரசைச் செவிசாய்க்க வைத்தார். மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை வைத்து மாவட்ட வளர்ச்சி குறித்து ஆய்வுசெய்து கூட்டங்களை நடத்தினார். இதன் மூலம் பல முறைகேடுகளை வெளியில் கொண்டுவந்தார்.
மதுரை ரயில் நிலையத்துக்கு எதிரே அமைந்திருக்கிறது அவரது எம்.பி அலுவலகம். மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உடனுக்குடன் நடவடிக்கையைச் செய்ய பிரத்யேகமாக ஊழியர்களைப் பணியமர்த்தியிருக்கிறார் சு.வெங்கடேசன்.
தொகுதியில் இப்படியென்றால், எக்ஸ் தளத்திலும் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகவும், மத்திய அரசின் நீட், மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, டங்ஸ்டன் உள்ளிட்ட எண்ணற்ற விவகாரங்களில் தனி ஒருவராக தனது எதிர்ப்பைத் துணிச்சலுடன் பதிவு செய்து வருபவர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play