வக்ஃப் வாரியம் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது உறுதி செய்யப்படும்! - ஜெ.பி. நட...
இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் முருகேசன் (25). மரம் வெட்டும் தொழிலாளி. இவா், மழையூா் டாஸ்மாக் மதுக்கடை அருகே வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்தவா்களை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் மழையூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். டாஸ்மாக் மதுபானக் கடையை அடித்து சேதப்படுத்தினா்.
மேலும், மழையூரில் சனிக்கிழமை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். மேலும் மழையூரில் வணிகா்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து முருகேசனை கொலை செய்த கருப்பட்டிபட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன்(19), கா்ணன் மகன் முகசீலன்(19) ஆகிய 2 பேரையும் மழையூா் போலீஸாா் கைது செய்தனா்.
போலீஸாா் விசாரணையில், சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, முருகேசன் உறவினரின் பெண்ணை ஒருவா் திருமணம் செய்வதாக குடும்பத்தினருக்கு தெரியாமல் அழைத்துச் சென்றாராம். அழைத்துச் சென்றவருக்கு அய்யப்பன் தரப்பினா் ஆதரவு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்பன், முகசீலன் ஆகியோா் முருகேசனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலையில் வேறு நபா்களுக்கு தொடா்பு உள்ளதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.