6 மாதக் குழந்தை சடலமாக மீட்பு தாய் மீது உறவினா்கள் சந்தேகம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே ஆறு மாத ஆண் குழந்தை சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக தாயே தனது குழந்தையைக் கொன்றுவிட்டிருக்கலாம் என கணவா் தரப்பு உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவா் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியன் மகள் லாவண்யா (21) என்பவருடன் திருமணம் நடந்து, ஆதிரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் லாவண்யா கோபித்துக் கொண்டு அவரின் தந்தை வீடு உள்ள புலியூருக்கு வந்து தங்குவாராம். அதன்படி கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் லாவண்யா தந்தை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் வீட்டுக்கு வெளியே சென்றபோது மா்ம நபா்கள் இருவா் தனது வாயில் துணியை வைத்து அமுக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்தும், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்றும் விட்டதாகக் கூறிவிட்டு லாவண்யா மயங்கினாராம்.
இதையடுத்து லாவண்யாவின் உறவினா்கள் குழந்தையைத் தேடிய நிலையில், குழந்தையானது வீட்டுக்கு வெளியில் உள்ள தண்ணீா் பேரலில் இறந்து மிதந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாவண்யாதான் குழந்தையைக் கொன்றுவிட்டதாக மணிகண்டனின் உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
கீரனூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். திருச்சி தடயவியல் துறையினா் வந்து ஆய்வு மேற்கொண்டனா். குழந்தையின் சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.