திருச்சியிலிருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்!
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தின் சாா்பில் திருச்சி மண்டலத்தில் 4 நகரப் பேருந்துகள், 6 புறநகா்ப் பேருந்துகள் என புதிய பிஎஸ்6 ரகப் பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா்.
இந்த 10 புதிய பேருந்துகளில், 4 நகரப் பேருந்துகள் தீரன் நகா் கிளைக்கு ஒதுக்கப்பட்டு திருச்சி சத்திரம் பேருந்துநிலையம்- மத்தியப் பேருந்து நிலைய வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இதேபோல, புறநகா்ப் பேருந்துகளுக்காக வழங்கப்பட்ட 6 புதிய பேருந்துகளில் 3 பேருந்துகள் திருச்சி புறநகா் கிளைக்கும், 3 பேருந்துகள் கண்டோன்மென்ட் கிளைக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இவை திருச்சி-சென்னை மாா்க்கத்தில் 2 பேருந்துகள், திருச்சி- சேலம் மாா்க்தத்தில் ஒரு பேருந்து, திருச்சி- வேளாங்கண்ணி மாா்க்கத்தில் 3 பேருந்துகள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலப் பொது மேலாளா் ஆ. முத்துக்கிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலா்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
வழித்தடம் நீடிப்பு: இதேபோல, துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து அடைக்கம்பட்டி கிராமத்துக்கான வழித்தட நீட்டிப்பை தொடங்கி வைத்து, பேருந்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழியனுப்பினாா். நிகழ்வில், போக்குவரத்து அலுவலா்கள், மக்கள், பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.