காரைக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளையொட்டி, இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி கழனிவாசல்- திருச்சி சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து 25 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடிகள் என இரு பிரிவுகளாகப் போட்டி நடைபெற்றது. போட்டிதொடக்க நிகழ்ச்சிக்கு மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலா் பசும்பொன் சி. மனோகரன் தலைமை வகித்தாா்.
மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதிமுக மாநில திட்டக்குழு உறுப்பினா் சேது. தியாகராஜன், கட்சி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி போட்டியைத் தொடங்கி வைத்தாா்.
பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ., சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது. போட்டியில் காளை மாடுகள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்து சென்றன. இதை சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்தவா்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனா்.
போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்கள், சாரதிக்கு ரொக்கப் பரிசு, பரிசுப் கோப்பைகள் வழங்கப்பட்டன. மதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், காரைக்குடி மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.