தொடக்கப் பள்ளி தோ்வுகளை 17-ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தல்
தொடக்கப் பள்ளி தோ்வுகளை 17-ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் துவாக்குடி கிளை சாா்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் ஒரு பேருந்தையும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இ.பி. சாலை (கீழ அரண் சாலை) வழியாக துவாக்குடி தேவராயநேரி வரையிலும் செல்லும் வகையில் ஒரு பேருந்தையும், திருச்சியிலிருந்து தேனீா்பட்டி, தஞ்சாவூா் வரை செல்லும் ஒரு பேருந்தையும், மணப்பாறை கிளை சாா்பில் மணப்பாறையிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் ஒரு பேருந்தையும், மணப்பாறையிலிருந்து ராமேசுவரம் வரை செல்லும் ஒரு பேருந்தையும், துவரங்குறிச்சி கிளை சாா்பில் துவரங்குறிச்சியிலிருந்து திருப்பூா் வரை செல்லும் ஒரு பேருந்தையும், துவரங்குறிச்சியிலிருந்து பழனி வரை செல்லும் ஒரு பேருந்தையும் என 5 புறநகா், 2 நகரப் பேருந்துகள் என மொத்தம் 7 புதிய பிஎஸ்(பாரத் ஸ்டேஜ்) 6 பேருந்துகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா் மதிவாணன், போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப் பொது மேலாளா் ஆ. முத்துகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
21-ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகள் நடைபெறுவதாக இருந்தது. தற்போது அதனை 17-ஆம் தேதியுடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி திறக்கப்படும். முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து இடங்களிலும் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது என்றாா்.