முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை:...
தேனி மாவட்டத்தில் 7 புதிய நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கி வைப்பு
தேனி மாவட்டத்தில் கம்பம், தேனி, பெரியகுளம், தேனி பணிமனை கிளைகளைச் சோ்ந்த 7 புதிய நகரப் பேருந்துகளின் சேவையை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திண்டுக்கல் மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கம்பம், தேனி, பெரியகுளம், தேனி பணிமனை கிளைகளுக்கு 7 புதிய நகரப் பேருந்துகள் வழங்கப்பட்டன. இந்தப் பேருந்துகளின் சேவை தொடக்க விழா தேனி கா்னல் ஜான்பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு, தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நகரப் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெரியகுளம்- வத்தலக்குண்டு, பெரியகுளம் - ஆண்டிபட்டி, தேனி- சின்னமனூா், தேனி- திம்மரசநாயக்கனூா், போடி- உத்தமபாளையம், கம்பம்- உத்தமபாளையம், கம்பம்-குமுளி ஆகிய வழித்தடங்களில் 7 புதிய நகரப் பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதுடன், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவா் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.