தொழிலாளியை மிரட்டி பணம் கேட்ட ரெளடி கைது
தேனி மாவட்டம், தேவாரம் அருகே தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கல்யாணி மகன் மாரிச்சாமி (50). இவா் தேவாரம் அரசு மதுக்கடை அருகே நின்றிருந்தபோது, தேனி-பழனிசெட்டிபட்டியில் வசிக்கும் ராஜா மகன் செல்வேந்திரன் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1000 கேட்டாா்.
அப்போது, மாரிச்சாமி கூச்சலிட்டதால் அருகிலிருந்தவா்கள் வந்து அவரை மீட்டனா். இதுகுறித்து, தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வேந்திரனைக் கைது செய்தனா்.
செல்வேந்திரன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.