Waqf: ஒப்புதல் வழங்கிய முர்மு; நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்த மசோதா; முக்கிய தி...
CSK vs DC: 'டெஸ்ட் மேட்ச் ஆடுற இடம் இது இல்ல தோனி & கோ'- சென்னையின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
நடப்பு சீசனில் சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியை அடைந்திருக்கிறது. இது ஹாட்ரிக் தோல்வி. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்றிருந்தார்கள். அதன்பிறகு எந்தப் போட்டியிலும் வெல்லவில்லை. எல்லா போட்டியிலுமே சவாலே அளிக்க விரும்பாத அணுகுமுறையோடு ஆடித் தோற்றிருக்கின்றனர். சென்னை அணியின் பிரச்னைதான் என்ன?

2019 க்குப் பிறகு இந்த அணி 180 க்கு அதிகமான டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை. எல்லா அணிகளும் 250 ரன்களை விரட்டி கொண்டிருக்கையில் இந்த அணி மட்டும் அதே பழைய அணுகுமுறையோடு 160-170 ஆட்டங்களை ஆடி வருகிறது. அந்த ஆட்டங்களையும் முறையாக ஆடினால் வெல்ல முடியும். அதைக் கூட இவர்கள் செய்யாமல் இருப்பதில்தான் பிரச்சனை.
அடிப்படையான விஷயங்களைக்கூட சரியாகச் செய்வதே இல்லை. மற்ற அணியின் பீல்டர்களெல்லாம் பாய்ந்து பாய்ந்து பீல்டிங் செய்ய, சென்னை அணியின் வீரர்கள் மட்டும் கைக்கு வரும் கேட்ச்சைக்கூட விடுகிறார்கள். இந்தப் போட்டியிலும் தோனி ஒரு கேட்ச்சை விட்டிருக்கிறார். முகேஷ் சௌத்ரி விட்டிருக்கிறார். ஆடியிருக்கும் 4 போட்டிகளில் 7 கேட்ச்களை சென்னை அணி ட்ராப் செய்திருக்கிறது.

72% கேட்ச்களை மட்டுமே சென்னை அணி பிடித்திருக்கிறது. நடப்பு சீசனில் மிகக்குறைவான Catch Efficiency வைத்திருக்கும் அணி சென்னைதான். கேட்ச் மட்டுமில்லை. எக்கச்சக்க மிஸ் பீல்டுகளையும் செய்கிறார்கள். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நாங்கள் 15-20 ரன்களை அதிகமாக கொடுத்துவிட்டோம் அதனால்தான் தோற்கிறோம் என ருத்துராஜ் பேசுகிறார் இல்லையா? அந்த 15-20 ரன்களை பீல்டிங்கில்தான் விடுகிறார்கள். இன்றைய போட்டியின் டாஸின் போது கூட நாங்கள் பீல்டிங்கில் நிறையவே முன்னேற வேண்டும் என ருத்துராஜ் பேசியிருந்தார்.
ஆனால், வெறுமென பேசிக்கொண்டே இருக்க முடியாதல்லவா? தவறுகளை திருத்திக்கொள்ள என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லையா? ஒரு போட்டிக்கும் அடுத்த போட்டிக்கும் இடையே எந்த முன்னேற்றமும் இல்லையே?
அதேமாதிரிதான் பவர்ப்ளே பேட்டிங் செயல்பாடும். எல்லா அணிகளும் பவர்ப்ளேயில் எவ்வளவு அதிரடியாக ஆட முடியுமோ ஆடுகிறார்கள். ஆனால், சென்னை அணியிடம் பவுண்டரி அடிப்பதற்கான இண்டண்டே இல்லை. சென்னை அணி தோற்றிருக்கும் மூன்று போட்டிகளிலும் பவர்ப்ளேயில் 50 ரன்களைக் கூடத் தாண்டவில்லை. இன்றைய போட்டியிலும் 46 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.

பவர்ப்ளேயில் 7.4 என்கிற ரன்ரேட்டில் சென்னை அணி இந்த முறை ஆடியிருக்கிறது. இருக்கிற 10 அணிகளில் பவர்ப்ளேயில் மட்டமான ரன்ரேட் வைத்திருக்கும் அணி சென்னைதான். இப்படி இருந்துகொண்டு எப்படி பெரிய டார்கெட்களை விரட்ட முடியும்.
பவர்ப்ளேயில் விட்டால் அதை பிடிக்கும் வகையில் பின்னால் ஆட வேண்டும். அதற்கும் இந்த அணியில் வழி இல்லை. கடந்த இரண்டு சீசன்களாக சிவம் துபே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி காப்பாற்றி வந்தார். இந்த சீசனில் அவரும் நல்ல ஃபார்மில் இல்லை.
ஒரு சிக்சோ பவுண்டரியோ அடித்துவிட்டு அவுட் ஆகிவிடுகிறார். அத்தி பூத்தாற் போல எதோ ஒரு போட்டியைத்தான் ஜடேஜா வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். தோனி ரசிகர்களின் மன திருப்திக்காக இரண்டு சிக்சர்களை மட்டுமே அடிக்க நினைக்கிறார். இப்படி ஒரு அணியால் எப்படி டார்கெட்களை வெற்றிகரமாக சேஸ் செய்ய முடியும்?
இன்று கூட பாருங்கள். தோனி முதல் 18 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு இறுதியில் 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 43 பந்துகளில் அரைசதத்தை அடித்திருந்தார். இப்போதெல்லாம் ஓடிஐ போட்டிகளில் கூட இப்படி யாரும் ஆடுவதில்லை. டி20 இன் அணுகுமுறையே மாறிவிட்டது. இப்போது செட்டில் ஆவதற்கெல்லாம் நேரம் எடுத்துக் கொள்ள முடியாது.

ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆட வேண்டும். அதை விடுத்து முதலில் பந்தை எல்லாம் உருட்டி ஆடி விட்டு மேட்ச் கையை விட்டு சென்ற பிறகு சர்க்கஸ் காட்டுவதில் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. சென்னை அணியில் தோனி, ஜடேஜா, விஜய் சங்கர் எல்லாம் இதைத்தான் செய்கிறார்கள்.
ஒரு அணி வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ அது முக்கியமில்லை. களத்தில் நின்று தீர்க்கமாக போராட வேண்டும். அந்த போராட்டக்குணமே இல்லாத அணி இது. இப்படிப்பட்ட அணிக்கு வெற்றி எட்டாக்கனியாகத்தான் இருக்கும். சென்னை அணி பலமாக யோசிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
CSK அணி என்ன செய்யவேண்டும் உங்கள் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்!