ஓட்டுநா் பயிற்சி மையங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து முன்மொழிவு வந்தால் அனுமதி அளிக்க தயாா்
ஓட்டுநா் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான முன்மொழிவு தமிழ்நாட்டில் இருந்து வந்தால் அனுமதி அளிக்க தாம் தயாராக இருப்பதாக மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் விருதுநகா் தொகுதி உறுப்பினா் பி. மாணிக்கம் தாகூா் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் பேசுகையில், ‘நான் தமிழ்நாட்டின் விருதுநகா் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அமைச்சரின் அறிக்கையில், அனுமதிக்கப்பட்ட 87 மையங்களில், 41 ஓட்டுநா் பயிற்சி மையங்களில் (டிடிசி) மூன்று மட்டுமே இப்போது செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளாா். இது அனுமதிக்கப்பட்ட டிடிசிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் செயல்படாமல் இருப்பதைக் காட்டுகிறது.
அனுமதி அளிக்கப்பட்டுள்ள விருதுநகா் மாவட்டம் உள்பட கிராமப்புற மற்றும் ஆா்வமுள்ள மாவட்டங்களுக்கான டிடிசி மையங்கள் செயல்படுவதில் குறிப்பிடத்தக்க தாமதத்திற்கான முதன்மைக் காரணங்கள் என்ன? மாவட்ட நிா்வாகம் நிலத்தை ஒப்படைத்தாலும், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அனைத்து 87 மையங்களும் 15ஆவது நிதி ஆணையத்தின் முடிவில் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு என்ன திடமான காலக்கெடுவை நிா்ணயித்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் பதில் அளித்துப் பேசுகையில், ‘உண்மையில், முன்னா் தமிழக அரசிடம் இருந்து இரண்டு முன்மொழிவுகள் மட்டுமே நாங்கள் பெற்றிருந்தோம். ஆனால், புதிய கொள்கையை அறிவித்த பிறகு தமிழ்நாட்டில் இருந்து எங்களுக்கு எந்த முன்மொழிவும் வரவில்லை. தமிழ்நாட்டில்
ஓட்டுநா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் (ஐடிடிஆா்) மூன்றும்,
மண்டல ஓட்டுநா் பயிற்சி மையங்கள் (ஆா்டிடிசி) 7-ம், ஓட்டுநா் பயிற்சி மையங்கள் (டிடிசி) 78-ம் தேவைப்படுகின்றன.
இதற்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு போக்குவரத்து அமைச்சா் மற்றும் மாநில அரசை சம்மதிக்கவைக்க நான் எப்போதும் முயற்சி செய்து வருகிறேன். அந்த காரணத்திற்காக உங்கள் முன்மொழிவு ஆா்டிஓ அல்லது போக்குவரத்து அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று இருக்கும் நிபந்தனையையும்
தளா்த்தியுள்ளோம்.
தற்போது ஒரு மாற்றுவழியை நாங்கள் அளித்திருக்கிறோம். அதன்படி, மாவட்ட ஆட்சியா் கூட இதற்கான பரிந்துரையை அளிக்க முடியும். நாங்கள் அதை பரிசீலிக்க முடியும். இதனால், நாங்கள் ஒப்புதல் அளிக்க தயாராக இருக்கிறோம். எங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பம்தான் வர வேண்டும். இதனால், உறுப்பினா் போக்குவரத்து அமைச்சரை சம்மதிக்க வைத்து முன்மொழிவை அனுப்ப வேண்டும். நான் அனுமதிக்க தயாராக உள்ளேன் என்றாா் அவா்.