சக்கர நாற்காலியே கால்கள்; உலகம் முழுவதும் மாணவர்கள்... சுழலும் ஓவியர் சக்திராணி!
கொரோனா காலகட்டத்தில் தன்னியல்பில் சுழலும் உலகம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயங்கி நின்ற நிலையில், சக்கர நாற்காலியில் சுழன்றவாறு உலகமனைத்திலும் உள்ள வளரிளம் பருவ வரைகலை ஆர்வலர்களுக்கு வரைகலையின் நுணுக்கங்களை நேரலையில் பயிற்றுவித்திருக்கிறார் ஓவியர் சக்திராணி.
கும்பகோணத்தில் பிறந்த ஓவியர் சக்திராணி மூன்று வயதில் போலியோவின் பாதிப்பில் இரு கால்களும் செயல் இழந்து முடங்கியிருக்கிறார். இருப்பினும் படிப்பின் மீதும், ஓவியத்தின் மீதும் ஆர்வம் இருந்ததால் பள்ளிப்படிப்பை முடித்ததும் கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப்படிப்பை ஓவியம் மற்றும் நுண்கலையில் மேற்கொண்டு தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவரது ஊக்கத்திற்கு அச்சாணியாக விளங்கியது தனது குடும்பம் தான் என்று நெகிழ்ந்து நன்றி தெரிவிக்கிறார்.

“எனது அப்பா இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் தான் எனது படிப்பிற்கும், கலை ஆர்வத்திற்கும் உற்ற துணையாக இருந்தார். பள்ளிப்படிப்பின் போதும், கல்லூரிப் படிப்பின் போதும் கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் சற்றும் சளைக்காமல் என்னை வீட்டிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்குத் தினமும் அழைத்துச் சென்றார்.
அதே போல எனது அண்ணன். எனது தந்தைக்கு உரிய இடத்தை அவருக்கும் அளிக்க வேண்டும். அந்தளவிற்கு சிறகில் என்னை மூடி அருமை மகளாக இருவரும் வளர்த்தனர். எனது திருமணத்திற்குப் பிறகு எனது காதல் கணவரை அவர்களின் தொடர்ச்சியாகவே நான் காண்கிறேன். எனது வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட இந்த மூவரையும் என்றென்றும் நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். கலையின் மூலமாகவே எனது உடற்குறையைக் களைந்தேன். அந்த வகையில் வரைகலை காலம் எனக்கு அளித்த பற்றுக்கோல்” என்று கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஓவியர் சக்திராணி.
மே ஒன்றாம் தேதியில் இருந்து மே ஏழாம் தேதி வரை சென்னை லலித் கலா அகாதமியில் ஓவியர் சத்திராணி தனது நேரலை மாணவர்களின் ஓவியங்களுடன் தனது ஓவியங்களையும் காட்சிப் படுத்தி இருக்கிறார். கண் கொள்ளாக் கண்காட்சி அது!
மே ஒன்றாம் தேதியன்று சென்னை லலித் கலா அகாதமியில் மாண்புமிகு அமைச்சர் தா மோ அன்பரசன் ஓவியக் கண்காட்சியைத் துவங்கி வைக்க, பிரபல ஓவியர் மருது, சென்னைக் கவின்கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மனோகரன், கவிஞர் உமா ஷக்தி, லலித் கலா அகாதமியின் பிராந்திய இயக்குநர் சோவன் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பெரும்பாலும் இயற்கைக் காட்சிகளை பிரதிபலிப்பவையாக இருந்தன ஓவியங்கள். சில ஓவியங்கள் தத்ரூபமாக இருந்தன. அவை புகைப்படங்கள் போன்ற தோற்ற மயக்கத்தையும் ஏற்படுத்தின. குறிப்பாக அயல் நாட்டில் இருந்து அவரது மாணவர்கள் வரைந்து அனுப்பிய வெள்ளை மற்றும் சிவப்பு அல்லி மலர்கள்! அந்த ஓவியங்களைக் காணும் போது அல்லி மலர்களின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. அத்தனை இயல்பாக இருந்தன.

பெரும்பாலான ஓவியங்கள் வியக்கத்தக்க வகையில் வளரிளம் பருவத்தினரால் மூன்று மாதம் முதல் ஆறுமாதம் வரை நாள்தோறும் தொடர் நேரலை வகுப்பில் வரையப்பட்டவை! இதில் சிறப்பு என்னவென்றால், கண்காட்சியின் துவக்க நாள் அன்று அவரிடம் பயின்ற மாணவ மாணவியர் அவரவர் பெற்றோருடன் வந்திருந்து கண்காட்சியை சிறப்பாக நடத்தியது தான். கண்காட்சியைத் துவக்கி வைத்த ஓவியர் மருது இது குறித்து விதந்தோதிப் பேசினார். பொதுவாகவே ஓவியக் கண்காட்சி என்றால் அரங்கில் ஒரு சில பார்வையாளர்களும், விமர்சகர்களுமே இருக்கும் சூழ்நிலையில் கண்காட்சியின் துவக்க நாளன்றும் அதற்கடுத்த நாட்களிலும் அரங்கு நிறைந்தே இருந்தது.
கண்காட்சியில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த 185 ஓவியங்களில் 125 ஓவியங்கள் இவரிடம் பயின்ற மாணவர்களின் ஓவியங்கள். தன்னிடம் பயின்ற மாணவர்களை அவையத்து முந்தியிருப்பச் செய்யும் அவரது ஆசிரியர் இயல்பும், தலைமைப் பண்புமே அவரை வளரிளம் பருவ வரைகலை ஆர்வலர்களிடம் உலக முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது.
மாணவர்களின் ஓவியங்கள் பெரும்பாலும், இயற்கைக் காட்சிகளாகவும், நிலப்பரப்புகளுமாக இருந்தன. அவற்றில் இருந்து வித்தியாசமாக ஓவியர் சக்திராணியின் ஓவியங்கள் யானை எனும் பிரமாண்ட உருவத்தைக் கொண்டாடுவதாக இருந்தன.

இது குறித்து அவரிடம் கேட்ட போது யானை என்பது ஐம்பூதங்களின் உருவகம். 'கண்பத்’ என்பது ஐம்பூதங்களின் வழிபாட்டு முறை. அதன் உருவகம் தான் கணபதி எனும் ஆனை முகக்கடவுள்! எனவே தான் யானைகளை வரைவதன் மூலம் ஐம்பூதங்களை வணங்குகிறேன் என்றார். அவரது ஓவியங்களில் யானைகள் தான் பிரதானமாக இருக்கின்றன. அவற்றை வைத்த கண் மாறாமல் பார்க்கும் போது அவையும் நம்மை அவ்வாறே பார்க்கின்றன. நினைவில் காடுள்ள யானைகள் இவரது ஓவியங்களில் வீட்டின் வளர்ப்புப் பிராணிகளாக வலம் வருகின்றன.
கும்பகோணம் ஓவியம் மற்றும் நுண்கலைக்கல்லூரியில் இளங்கலையும் முதுகலையும் படித்த ஓவியர் சக்திராணி தனது ஓவியங்களின் வழியாகவே தனது மாற்றுத்திறனை வெளிப்படுத்துகிறார். அவரது முயற்சிகளில் அவரது குடும்பத்தினரின் பங்கைப் பற்றிப் பெருமையுடன் கூறுகிறார். கும்பகோணத்தில் ஏழு வருடப்படிப்பின் போதும், அதன் பின்னர் அவரது ஓவிய முயற்சிகளின் போதும் அவரது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாகத் தனது கணவர் ஞானசேகரனைப் பற்றிப் பேசுகையில் அவரது கண்களில் காதல் ஒளிர்கிறது. இவரது கல்லூரிக் காலத்திலேயே இவர் மீது காதல் கொண்ட கணவர் இரு தரப்புப் பெற்றோரின் ஒப்புதலுடனேயே இவரைக் கைத்தலம் பற்றியிருக்கிறார். பற்றிய கைத்தலம் அவரைப் பல்வேறு கண்காட்சிகளுக்கும், மாணவர் பயிற்சிப் பணிகளுக்கும் உறுதுணையாக அழைத்துச் சென்று வருகிறது. இணையரின் செல்ல மகளும் ஒரு ஓவியர் தான். அவள் வரைந்த ஓவியம் ஒன்றில் இதழ் விரிந்த பூ ஒன்று உள்ளடுக்கில் இருந்து வெளிப்புறம் வரை வர்ணஜாலம் நிகழ்த்தி இருந்தது கண்கொள்ளாக்காட்சி!

கண்காட்சியின் போது பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து வந்து அவர் உடனிருந்த பயிற்சி மாணவர்களுடன் உரையாடிய போது ஓவியர் சக்திராணியை அவர்கள் ஆசிரியராகக் கொண்டாடியதைக் கண்கூடாக உணர முடிந்தது. பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளே குறித்த நேரத்தில் துவங்காத நிலையில், நாள்தோறும் மிகச்சரியாக மாலை 5 மணிக்கு நேரலையில் வரைகலை வகுப்புகளை நடத்தியதன் மூலம் ஓவியப் பயிற்சியுடன் நேரந்தவறாமை மற்றும் கால மேலாண்மை ஒழுக்கத்தையும் பயிற்றுவித்திருக்கிறார் ஓவியர் சக்திராணி!
வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் விரக்தி எனும் விளிம்பிற்கே செல்லும் மனிதர்களிடம் இருந்து தனது ஓவியத்திறமையைப் பற்றுக்கோடாகக் கொண்டு தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே கைப்பற்றி ஓவியம் எனும் வரைகலையில் கடைத்தேற்றம் பெற்றவர் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். இதற்குக் காரணம் அவர் ஓவியத்தின் மீது கொண்ட பேரன்பும் பெருங்காதலும் தான்! அந்தப் பேரன்பும் பெருங்காதலும் தான் அவரை இணையத்தின் வழியாகப் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மற்றும் ஊர்களில் உள்ள வளரிளம் பருவ வரைகலை ஆர்வலர்களை இணைத்திருக்கிறது.
அன்பின் வழியது வரைகலை!
- நா சோமசுந்தரம்