India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்" - சீனா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன்காரணமாக, மே 9-ம் தேதி இரவு பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது. இவ்வாறிருக்க, இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளைத் தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.
அதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி தர இந்திய ராணுவத்தை வலியுறுத்தினார்.
மறுபக்கம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், பஹல்காம் தாக்குதலில் உரிய விசாரணை இல்லாமல், அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை தங்கள் மீது சுமத்தி இந்தியா தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும், அதற்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுத்ததாகவும் தனது மக்களிடம் கூறினார்.

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் டாருடன் தொலைபேசியில் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, "பாகிஸ்தானின் அனைத்து மூலோபாய கூட்டுறவு கூட்டாளியாகவும், இரும்புக்கரம் கொண்ட நண்பராகவும் இருக்கும் சீனா, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கும்." என்று கூறியிருக்கிறார்.