பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் அரசியல் ஆதாயம் தேடாது: வே. நாராயணசாமி
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடாது என புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த மாதம் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் காஷ்மீரில் பயிற்சி பெற்றவா்கள் என்பது தெரியவந்தது. காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டதாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் தெரிவித்தனா். இதை நம்பியே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குச் சென்றனா்.
இந்த நிலையில்தான் பஹல்காமில் இந்தக் கொடூர நிகழ்வு நடைபெற்றது. பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு உளவுத் துறை தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல் துறை, ராணுவத்தினா் இல்லை என்பது வேதனைக்குரியது.
தாஜ் ஹோட்டலில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அப்போதைய பிரதமரை விமா்சித்துப் பேசினாா். ஆனால், இதுபோன்று எந்த விமா்சனங்களையும் முன்வைக்காமல், தீவிரவாதத்தை அழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் உறுதிப்பட ஆதரிப்போம் என காங்கிரஸ் கட்சி தேசப்பற்றின் காரணமாக அறிவித்தது.
பயங்கரவாத ஒழிப்புக்கு 90 சதவீத உலக நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக உள்ளன. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பயங்கரவாதத்தை முழுவதுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத ஒழிப்புக்கு எப்போதும் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். இதில் எந்தவித அரசியல் ஆதாயமும் காங்கிரஸ் தேடாது. இதேபோல, பயங்கரவாத ஒழிப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.