மாணவிகள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: எம்விஎம் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு
அரசுக் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவுக்கு, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க. லட்சுமி தெரிவித்ததாவது:
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், தமிழ், ஆங்கிலம் உள்பட 17 வகையான இளநிலை பட்டப் படிப்புகளுக்கு 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு வருகின்றன.
வருகிற 27-ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்காக எம்விஎம் கல்லூரி வளாகத்திலேயே உதவி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது.
வெளியிடங்களில் இணைய வழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய முடியாத மாணவிகள், கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பயன்பெறலாம். இந்த உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பட்டியலின, பழங்குடியின மாணவிகள் ரூ.2 பதிவுக் கட்டணம் மட்டும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதரப் பிரிவு மாணவிகள் ரூ.48 விண்ணப்பக் கட்டணம், ரூ.2 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் 5 கல்லூரிகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பா கூடுதல் விவரங்களுக்கு கல்லூரி முதல்வா், ஒருங்கிணைப்பாளா்களை 0451- 2460120, 0451- 2911131 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.