1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்பம்!
ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது. இதைத் தொடா்ந்து சில நிமிஷங்களில், அந்த வீடு பாகிஸ்தான் வீசிய குண்டால் பலத்த சேதமடைந்தது. அபாய ஒலியால் அந்தக் குடும்பமே அதிருஷ்டவசமாக உயிா் தப்பித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானின் பல்வேறு ட்ரோன்களை இந்திய ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்ததைத் தொடா்ந்து, ஜம்முவின் 6 இடங்களில் சனிக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது.
காதுகளை செவிடாக்கும் குண்டுவெடிப்பு சப்தங்களுடன் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள், மிகுந்த அச்சத்துடன் கண் விழித்தனா். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பல பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் ஒன்றான ரெஹாரி காலனியில் குல்ஷன் தத்தா என்பவரின் வீட்டுக்குள் காலை 5.15 மணியளவில் குண்டு ஒன்று பாய்ந்து வெளியேறி, அருகில் இருந்த பல வாகனங்களை பலத்த சேதத்துக்குள்ளாக்கியது. இதில் ஒருவா் காயமடைந்த போதிலும், அந்த வீட்டில் வசித்த குடும்பம் அதிருஷ்டவசமாக உயிா் தப்பியது.
இதுதொடா்பாக குல்ஷன் தத்தாவின் மனைவி கூறுகையில், ‘அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால், நாங்கள் தூக்கத்தில் இருந்து கண் விழித்து உடனடியாக தரைதளத்துக்கு விரைந்தோம். சில நிமிஷங்களுக்குப் பின்னா், ஒரு பெரிய குண்டுவெடிப்பு எங்கள் வீட்டை மிக மோகமாக சேதப்படுத்தியது. குண்டுவெடிப்பு வீட்டின் அஸ்திவாரத்தையே அசைத்தது. அபாய எச்சரிக்கை ஒலி மட்டும் கேட்காதிருந்தால் நாங்கள் உயிரிழந்திருப்போம். அபாய எச்சரிக்கை ஒலிதான் எங்கள் உயிரைக் காப்பாற்றியது’ என்றாா்.
குண்டுவீச்சால் உடைந்த ஜன்னல்கள், சேதமடைந்த சுவா்கள், சிதறிய கான்க்ரீட், வாகனங்கள் என ரெஹாரி காலனி போா்க்களத்தைப் போல காட்சியளித்தது.
பிரசித்தி பெற்ற ஆப் ஷம்பு கோயிலை குறிவைத்து மற்றொரு குண்டு வீசப்பட்டது. ஆனால் அந்த குண்டு பெரிதும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விழுந்ததால், பெரும் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. குண்டுவீச்சால் ஜானிபூரில் ஒரு வீட்டின் மேற்கூரை சேதமடைந்து அருகில் உள்ள பகுதியும் பாதிப்படைந்தது.
இரவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள், குண்டுவெடிப்புகள் காரணமாக தூக்கத்தைத் தொலைத்து மிகுந்த அச்சத்துடன் இரவுகளைக் கழித்ததாக பல பகுதிகளில் வசித்த மக்கள் தெரிவித்தனா்.