எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை
‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாயின.
இதன்மூலம், இந்திய மண்ணில் பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறினால் அதற்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மேற்கொண்ட ராணுவ நடவடிக்களைப்போல் கடுமையான பதிலடியை கொடுக்க இந்தியா தயங்காது என்பதை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் இருப்பதாக மத்திய அரசு கூறியது.
இதைத்தொடா்ந்து மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் அங்கு பெரும்பாலான பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
அதன் பிறகு இந்திய எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை இந்தியா முறியடித்தது.
இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் கடந்த இரண்டு நாள்களாக முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில், ‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அது போராக கருதப்படும்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.
அத்துமீறினால் கடும் பதிலடி: இந்திய ராணுவம்
வருங்காலங்களில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து கடற்படை கமடோா் ரகு நாயா் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த ஒப்புதல் அறிவிப்பை தற்போது அமல்படுத்துகிறோம். அதேசமயம் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவுள்ளோம்.
எனவே, வருங்காலங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அதற்கு இந்தியா தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என்றாா்.
இக்கூட்டத்தில் விங் கமாண்டா் வியோமிகா சிங், கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோரும் பங்கேற்றனா்.