வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை நடவடிக்கை தொடா்பான அறிவிக்கை ஓரிரு நாளில் முறைப்படி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைவா்களுக்கு எதிராக வங்கதேசத்தின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் நடைபெற்று வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, இந்த தடையைத் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
தொடா்ந்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதனிடையே, இடைக்கால அரசுக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாக வங்கதேச மக்கள் மற்றும் அவாமி லீக் தொண்டா்களிடம் ஷேக் ஹசீனா அவ்வப்போது உரையாற்றி வருகிறாா். நில அபகரிப்பு, மாணவா் போராட்டத்தில் நடைபெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.