ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 பேருக்கு மானியத்துக்கான காசோலைகளை அவா் அளித்தாா்.
முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் மானியத் தொகை ரூ. 25,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஹஜ் மானியத் தொகை திட்டத்துக்காக நிகழாண்டு ரூ.14.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தகுதியுள்ள பயனாளிகளாக 5,650 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக 10 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை மானியத் தொகையாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வு தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ப.அப்துல் சமது, பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா்மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை முதன்மைச் செயலா் சா.விஜயராஜ் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.