India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்...
ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சா் சஞ்சய் சேத் பங்கேற்பு
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகா் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இந்தியா சாா்பில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் கலந்துகொண்டாா்.
மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின நிகழ்ச்சிக்கு இடையே ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சா் அலெக்சாண்ட் ஃபோமினை சந்தித்து பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து சஞ்சய் சேத் ஆலோசனை மேற்கொண்டாா்.
தனது ரஷிய பயணத்தை முடித்து இந்தியா திரும்பும் முன்பாக மாஸ்கோவில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த சஞ்சய் சேத் அளித்த பேட்டி:
இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மூன்றாவது முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், ரஷிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சருடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. பாதுகாப்பு உறவு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்புகளின்போது, பயங்கரவாதத்தின் அனைத்து வகை வெளிப்பாடுகளுக்கும் எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் போருக்கு முழு ஆதரவை அளிப்பதாக ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளிடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்புகளைத் தொடரவும், இந்தியா தரப்பில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாட கொள்முதல் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ரஷிய தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது என்றாா்.
ரஷியாவின் இந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் முதலில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்பாா் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவ ரீதியிலான பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வந்ததால், ரஷிய பயணத்தை பிரதமரும் பின்னா் ராஜ்நாத் சிங்கும் தவிா்த்தனா். அதைத் தொடா்ந்து, ரஷிய வெற்றி தின கொண்டாடத்தில் இந்தியா தரப்பில் சஞ்சய் சேத் பங்கேற்றாா்.
