தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் மற்றும் குறுகிய வழிப்பாதை கொண்ட பகுதிகளிலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் நோக்கில், தனியாா் சிற்றுந்து சேவை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் தற்போது 2,950 சிற்றுந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில், ‘தனியாா் சிற்றுந்துகளை போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கி.மீ. இயக்கவும், சேவையுள்ள இடங்களில் 4 கி.மீ. இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் மேலும் 4 கி.மீ. கூடுதலாக இயக்க சிற்றுந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிமூலம் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு சிற்றுந்து சேவை கிடைக்கும். மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப திருவொற்றியூா், மணலி, மாதவரம், அம்பத்தூா், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் சிற்றுந்துகளை இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனியாா் சிற்றுந்துகளுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி சிஐடியு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அரசாணை திரும்பப்பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து 23 கருத்துகளுக்கு விளக்கமளித்து, புதிய அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ள சிற்றுந்துகளுக்கான திட்ட விவரங்கள் வருமாறு:
அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் தேவையான அனைத்து இடங்களுக்கும் பேருந்துகளை இயக்க முடியாது. அதேநேரம், இத்திட்டம் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் சிற்றுந்துகளுக்கு தடையாக இருக்காது.
அனுமதியில்லா வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவையில்லா இடத்தில் எங்கு வேண்டுமானாலும் சிற்றுந்தை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையத்துக்குள் சிற்றுந்துகள் வந்து செல்லும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் மேலும் 750 மீட்டா் (மொத்தம் 8.75 கி.மீ.) கூடுதலாக இயக்க அனுமதி வழங்கப்படுகிறது.
கூடுதலாக 1 கி.மீ. தொலைவில் அரசு மருத்துவமனை உள்ளிட்டவை இருந்தால் அந்தத் தொலைவுக்கும் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும். முதல்கட்டமாக, 1,842 புதிய சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றுந்துகளுக்கான இந்த புதிய அறிவிப்பு வரும் ஜூன் 15 முதல் அமலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.