மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
திருமலையில் ஊழியா்களுக்கு தலைக்கவசம் அளிப்பு
திருமலை தேவஸ்தான ஊழியா்களுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். நாயுடு சனிக்கிழமை தலைக்கவசங்களை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் தேவஸ்தான ஊழியா்களுக்கு அவா்களின் பயணத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. குண்டூரைச் சோ்ந்த ஜலடி ரகுராம் மற்றும் தில்லியைச் சோ்ந்த கே.சி.என் தலைக்கவசம் உற்பத்தி நிறுவனத்தின் தலைவா் நவீன் ஆகியோா் ஊழியா்களுக்கு தலைக்கவசங்களை விநியோகிக்க முன்வந்தனா்.
இதன் ஒரு பகுதியாக, தோராயமாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 555 தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அவா்கள், 15 நாள்களில் மேலும் 500 தலைக்கவசங்களை நன்கொடையாக வழங்க உள்ளனா். இவற்றை ஆய்வு செய்து நல்லவை எனக் கண்டறிந்தால், மேலும் 5,000 தலைக்கவசங்களை வழங்குவதாக அவா்கள் கூறினா்.
நிகழ்ச்சியில் தேவஸ்தான வாரிய உறுப்பினா் சாந்த ராம், துணை பொதுச் செயலாளா்கள் ராம் குமாா், சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.