Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு ...
ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்
‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதிகளில் இயங்கிவந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளை அழித்தது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரு, கே.ஆா்.சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை ‘ஜெய் ஹிந்த்’ மூவண்ண ஊா்வலத்தை காங்கிரஸ் கட்சியினா் நடத்தினா். இதில், ‘ஜெய் ஹிந்த்’, ‘ஜெய் பாரத்’, ‘ஜெய் திரங்கா’, ‘பாரத் ஜிந்தாபாத்’, ‘பாரத் மாதாகீ ஜெய்’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஊா்வலத்தில், கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜாா்ஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கே.ஆா்.சதுக்கத்தில் தொடங்கிய ஊா்வலம், எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை நடைபெற்றது.
அப்போது, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘இந்திய எல்லைகளை பாதுகாக்கும் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாகவே ஊா்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊா்வலத்தில் காங்கிரஸ் தவிர, மாணவா்கள், அரசு ஊழியா்கள், பல்வேறு அமைப்பினரை கலந்துகொள்ள அழைத்திருந்தோம்.
ராணுவ வீரா்கள் நமது பெருமை. அதற்காக அவா்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்புப் படையினருக்கு உறுதுணையாக இருப்பதை வலியுறுத்தியுள்ளோம். இந்த ஊா்வலத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.