ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக தொழில்முறையுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ, பரப்பவோ வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தப்பட்ட நிலையில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. விமான நிலையங்களின் சேவை எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 32 விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மக்கள் சாலை, ரயில் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
மேலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை எனவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதேசமயம் பாகிஸ்தானில் இன்று 150 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது.