பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!
இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போா்ப் பதற்றம் அதிகரித்ததால், இருநாடுகளும் அவதிக்குள்ளாகின.
பாகிஸ்தானை பொருத்தவரை, பயங்கரவாதத்தின் முதுகெலும்பை இந்தியா உடைத்துவிட்டது. தமக்கு மிக வலிமையான, தீா்க்கமான தலைமை உள்ளது என்பதை இந்தியா வெளிக்காட்டியுள்ளது’ என்றாா்.
ஓய்வுபெற்ற கா்னல் அனில் பட் கூறுகையில், ‘பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிக்கக் கூடாது, அந்தக் குழுக்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில், இருநாடுகளுக்கு இடையே புரிந்துணா்வு ஏற்பட்டிருக்கக் கூடும்.
பாகிஸ்தானின் வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது, அந்த உடன்படிக்கை பின்பற்றப்படுமா? எந்த அளவுக்கு நன்றாகப் பின்பற்றப்படுகிறது என்பதை பாா்க்க வேண்டும். பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், அதற்கான பதிலடி இன்னும் கூடுதலாக இருக்கும். எனினும் தற்போது ஏற்பட்ட மோதலில் இருந்து பாகிஸ்தான் சில பாடங்களைக் கற்றிருக்கும் என நம்புவோம்’ என்றாா்.
ஓய்வுபெற்ற பிரிகேடியா் குஷால் தாக்குா் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரில் முக்கிய பங்கு வகித்தாா். அவா் கூறுகையில், ‘இருநாடுகளும் மோதலை கைவிட மேற்கொண்ட முடிவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பிரதமா் மோடியின் தலைமை, இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் ராஜீய உறவுகள், பயங்கரவாதத்தை எள்ளளவும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி’ என்றாா்.