சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா...
ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!
ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்டுநர்கள் அந்த ரயில்கள் நிறுத்தப்படும் ஒவ்வொரு இடைநிலை நிலையத்தின் நேரங்களையும் தங்களது பணியாளர் நாள்குறிப்புகளில் குறித்து வைப்பது போன்ற கூடுதல் வேலைகளை இனி செய்ய வேண்டாம் என ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகியோர் பின்பற்றி வந்த காகித வேலைகளைக் குறைப்பது குறித்து மதிப்பிடுவதற்கு ரயில்வே துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது.
அந்தக் குழுவின் பல பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரயிலை இயக்கியபடி ஓட்டுநர்கள் மேற்கொண்ட காகித வேலைகள் இனி தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல், உதவி ஓட்டுநர்களின் காகித வேலைகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயிலை இயக்கும் ஓட்டுநர்களுடன் உதவி ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படுவதற்கு முன், பணியாளர்கள் விவரங்கள், வேகக் கட்டுப்பாடுகள், ரயிலின் திட்டமிடப்பட்ட நிறுத்தங்கள், பயணிகள் ரயில்களின் நேரங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் தொடர்பான உத்தரவுகளை உதவி ஓட்டுநர்கள் எழுதி வைப்பார்கள்.
ரயிலின் இயக்கம் துவங்கப்பட்ட பின்பு, நிறுத்துமிடங்களின் உண்மையான நேரங்கள், வழியில் ஏற்படும் அசாதாரணங்கள் (குறைபாடுகள் உள்பட) மற்றும் பணியாளர் நாள்குறிப்பு ஆகியவற்றை உதவி ஓட்டுநர்கள் குறித்து வைப்பார்கள்.
எனினும், தற்போது ஏற்கப்பட்டுள்ள பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரையில் உதவி ஓட்டுநர்கள் ஒவ்வொரு நிறுத்ததை ரயில் கடக்கும் நேரத்தைக் குறித்து வைப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கையுடன், ஒரு பணியாளர் நாள்குறிப்பு மற்றும் பதிவு புத்தகத்தின் வடிவமைப்பையும் ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது ஊழியர்கள் பின்பற்ற மிகவும் எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ரயில் ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்களின் பணியை இலகுவாக்கியுள்ள ரயில்வே துறையின் இந்தப் புதிய அறிவிப்பை பல்வேறு லோகோ பைலட் சங்கங்கள் வரவேற்றதுடன், இதுபோன்ற மற்ற பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிக்க:நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை