மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்
மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சென்னை பெருநகர் ஊர்க்காவல் படையினர் 514 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அணிவகுப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், ”1963 இல் தமிழக அரசால் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. அமைதி சட்ட ஒழுங்கு அடிப்படை பயிற்சி நிலை நாட்ட ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களை திறமையாக கண்டுபிடித்து தண்டனை வழங்கவும் காவல்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்.
பொதுமக்கள் பார்வையில் ஊர்க்காவல் படை காவலர்களும் அதிகாரிகளே, ஆகவே காவல் துறைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாதவாறு மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறையினருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புச் சலுகைகளும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் போரில் நாட்டிற்காக அயராது உழைத்து வரும் நம்முடைய இந்திய ராணுவ வீரர்களுக்கும் முப்படை வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்..
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
தமிழக காவல்துறை சார்பில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு