சிதம்பரம்: `தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது!’ - உயர் நீதிமன்றம் மறுத்த காரணமென்ன ?
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று வழிபடுவதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தங்கள் கோயிலுக்கு உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று தெரிவித்த தீட்சிதர்கள், கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. அதையடுத்து, `தீட்சிதர்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் எங்களை கனகசபை மீது நின்று வழிபட அனுமதிக்கவில்லை’ என்று பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக அரசின் உத்தரவை பின்பற்றாத தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா. அதனடிப்படையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 6 தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர் சிதம்பரம் நகர போலீஸார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தீட்சிதர் தரப்பு.
அந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்தார். அதேபோல கடந்த 2022-ம் ஆண்டு கனகசபை மீது நின்று வழிபட முயற்சித்த ஜெயசீலா என்ற பெண்ணை சாதி பெயர் கூறி தாக்கியதாக, 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை தற்போது கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கௌரி சங்கர் உள்ளிட்ட 8 தீட்சிதர்கள் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய முடியாது என்று மறுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி ஜி.கே. இளந்திரையன்.