அமெரிக்க விஸ்கிகளுக்கு வரிவிதித்தால் ஐரோப்பிய மது வகைகளுக்கு 200% வரி! -டிரம்ப்
Train Hijack: 'அப்பாவுக்காக; விளம்பரத்துக்காக' - இந்தியாவில் நடந்த சில ரயில் கடத்தல்களின் பின்னணி
கடந்த இரண்டு நாள்களாக பாகிஸ்தான், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கவனம் பெற்ற சம்பவங்களில் ஒன்று பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை 'ஜாபர் எக்ஸ்பிரஸ்' பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது, தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதனால் ரயில் தடம் புரண்டது. அதைத் தொடர்ந்து, பலுச் விடுதலை படையை (பிஎல்ஏ) சேர்ந்த தீவிரவாதிகள் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்ததால், தீவிரவாதிகளை எதிர்த்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ரயில் பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ரயிலில் இருப்பவர்களை மீட்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் களமிறங்கியது. சுமார் 30 மணி நேரத்துக்குப் பின்னர், இந்த கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் ராணுவம், 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. இரண்டே நாளில் உலகளவில் கவனிக்கப்பட்ட பரபரப்பான சம்பவமாகியிருக்கிறது 'ஜாபர் எக்ஸ்பிரஸ்' பயணிகள் ரயில் கடத்தல். இது பாகிஸ்தானில் நடந்த ரயில் கடத்தல்... இதேபோல இந்தியாவிலும் சில ரயில் கடத்தல்கள் நடந்திருக்கின்றன.
சென்னையில் நடந்த கடத்தல்...
அன்று ஏப்ரல் 29, 2009. அதிகாலை 5 மணி. சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் நின்றிருந்தது மின்சார ரயில். அதிகாலை நேரம் என்பதால் கூட்டமெல்லாம் இல்லை. ஒவ்வொரு பெட்டியிலும் ஒன்று, இரண்டு என சிலர் ஏறியிருந்தார்கள். ரயில் புறப்படும் அறிவிப்பு வருவதற்கு முன்பே, திடீரென ரயில் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ரயிலின் வேகம் 70...80...90 என அதிகரித்துக்கொண்டே இருந்தது. பயணிகள் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்மீது மோதி சிலப் பெட்டிகள் தூக்கிவீசப்பட்டது.
இதில் 4 பயணிகள் பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னணி என்ன என்பதை காவல்துறை ஆராய முயன்றது. அப்போதுதான் ரயில் மோதுவதற்கு சில வினாடிகள் முன்பு ரயிலின் பைலட் பெட்டியிலிருந்து, ஒருவர் கீழே குதித்திருக்கிறார். அதில், கம்பியில் மோதி கைகால்கள் துண்டுதுண்டானது. ஒரு கையில் நாகராஜா அல்லது தேகாராஜா என்று எழுதப்பட்டிருந்தது. அவர் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், நக்ஸல் அமைச்சை சேர்ந்தவரக இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறதே தவிர, அவர் தொடர்பான வேறு எந்த செய்திகளும் இல்லை. அதேபோல, இப்போதுவரை அவர் ஏன் இந்த ரயிலைக் கடத்தினார் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் நடந்த கடத்தல்...
2009, அக்டோபர் மாதம் 27-ம் தேதி, செவ்வாய் கிழமை மேற்கு வங்கத்திலிருந்து டெல்லி செல்லும் புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. நூற்றுக் கணக்கான பயணிகள் அதில் பயணித்தனர். ரயில் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தாலா ரயில் நிலையத்தை கடந்ததும், ஜங்கல்மஹா பகுதியில், சுமார் 300 - 400 மாவோயிஸ்டுகள் சிகப்பு கொடியைக் காண்பித்தும், ரயில் தண்டவாளத்தை மறைத்தும் ரயிலை நிறுத்தக் கூறினர். ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் ரயிலை சுற்றிவளைத்து, நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
மாவோயிஸ்ட் தலைவர் சத்ரதர் மஹதோவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கடத்தல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 20 காவல்துறை அதிகாரிகள், 150 CRPF பணியாளர்கள் உட்பட பாதுகாப்புப் படையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு, ரயிலையும், பயணிகளையும் எந்த உயிரிழப்புமின்றி பத்திரமாக மீட்டனர்.
இந்தக் கடத்தலுக்கு பின்னணியில், மேற்கு வங்கத்தில் அப்போது முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சாரியா அரசு, நக்சல்கள் - காவலர்களுக்கு மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தங்களின் ஆளுமையை நிரூபிக்கும் விதமாகவும், தங்களுக்கான விளம்பரமாகவும் இந்த ரயில் கடத்தல் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
மகாராஷ்டிராவில் நடந்த கடத்தல்...
மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரபல தொழிலதிபர் ஜெய்சந்த் வைத்யா 44 நாள்கள் கடத்தப்பட்டிருந்தார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான கப்ரா என்ற உபேந்திர சிங் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் மும்பை - ஹவுரா செல்லும் ஜன் சதாப்தி ரயில், பிப்ரவரி 6, 2013 அன்று புறப்பட்டது. மும்பை-ஹவுரா பிரதான ரயில் பாதையில், சிர்சா கேட் - கும்ஹாரி இடையே ஜன் சதாப்தி ரயில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. ரயில் ஓட்டுநரும், மக்களும் மிரட்டப்பட்டு, வேறொரு ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் உபேந்திராவின் மகன் பிரிதம் சிங் என்கிற ராஜேஷ், தன்னுடன் இருக்கும் குண்டர்களுடன் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தனது தந்தை உபேந்திர சிங்கை விடுவிப்பதற்காக, இதை செய்ததாகத் தெரிவித்தார். அதே நேரம், சிறையில் அடைக்கப்பட்டு, குற்றவியல் வழக்கு விசாரணைக்காக துர்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட உபேந்திரா சிங், காவல்துறையிடமிருந்து தப்பித்தார். இந்த செய்தியறிந்ததும் அந்தக் கடத்தல்காரர்கள் ரயிலை விட்டுவிட்டு தப்பிவிட்டார்கள். அதன்பிறகு உபேந்திரா சிங், அவரது மகன் பிரிதம் சிங் உட்பட பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play