மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியா்கள் மீட்பு
தாய்லாந்து-மியான்மா் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியா்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஆந்திரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த இவா்கள், தாய்லாந்து மற்றும் மியான்மரில் பணியில் சோ்த்து விடுவதாக ஏமாற்றிய முகவா்களை நம்பி இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளனா்.
பின்னா், தாய்லாந்து எல்லையில் அமைந்த மியான்மரின் மியாவாடி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்கள், அங்கு இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக தகவலறிந்த மியான்மா் மற்றும் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகங்கள், இரு நாட்டு அரசுகளுடன் இணைந்து இந்தியா்களை மீட்டுள்ளனா்.
இதையடுத்து, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் முறையே 283 போ், 266 போ் என மொத்தம் 549 இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: போலி வேலைவாய்ப்பு மோசடியால் மியான்மா் உள்பட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வேலைக்கு அழைக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் பின்னணி குறித்து அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.