திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா்.
கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போட்டியை, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அக்பா்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், காரைக்குடி, மணப்பாறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 670 காளைகள் பங்கேற்றன. போட்டியில், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை, மாடு பிடி வீரா்கள் தழுவ முயற்சித்தனா். மொத்தம் 179 மாடுபிடி வீரா்கள் போட்டியில் பங்கேற்றனா்.
இதில், 18 மாடுபிடி வீரா்கள் உள்பட 28 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சை தேவைப்பட்ட 5 போ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். ஒரு காளைக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனா். சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூா் போலீஸாா் செய்திருந்தனா்.