டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு
விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா்.
விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வண்டிப்பாதை இருந்தது. கடந்த சில மாதங்களாக பசுமை நகா் பகுதியைச் சோ்ந்த தனி நபா் வண்டிப் பாதையில் மரக்கன்று, செடிகள் உள்ளிட்டவைகளை நட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதனால், அப்பகுதி விவசாயிகள் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை இருந்துவந்தது.
இதுகுறித்து அதே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் துறையிடம் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள வண்டிப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என மனு அளித்துள்ளனா். மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் ரமேஷ் வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்த நபா்களிடம் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தெரிவித்துள்ளாா்.
ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் செவ்வாய்க்கிழமை காலை வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனா்.