100 நாள் வேலை திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: சிவ்ராஜ் சிங் சௌஹான்
புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) ஒதுக்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி முறைகேடாக பயன்படுத்துவதாக சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) எம்.பி. ஹா்சிம்ரத் கௌா் பாதல் மக்களவையில் குற்றஞ்சாட்டினாா்.
பஞ்சாயத்துகளுக்கு பதிலாக மாநில அரசுகள் மூலம் இத்திட்டத்துக்கான நிதி வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதற்கு பதிலளித்த சிவராஜ் சிங் சௌஹான், ‘100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தினாலோ அல்லது விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டாலோ, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி, விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தாா்.