வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
`தடைகளை உடைத்து மங்கலம் அருளும்' திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் விளக்குப் பூஜை
2025 மார்ச் 21-ம் தேதி திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

சகல ஜீவராசிகளையும் காத்து அருள்பவர் திருமால். இவரே அழகிய வடிவம் கொண்டு ஆட்சி புரியும் திருக்கோலத்தில் இருப்பதால் இவரை சௌந்தரராஜ பெருமாள் என்று வணங்குவதும் உண்டு. அவ்வகையில் புராண காலம்தொட்டே இம்மண்ணுலகில் அமர்ந்து ஆட்சி செய்து வருபவர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள். இவரை எண்ணினாலே வேதனைகள் தணியும் என்பார்கள். இவரைத் தேடி வந்து சரண் அடைந்தால் உங்கள் ஏழேழ் தலைமுறையும் வாழ்வாங்கு வாழும் என்பது நம்பிக்கை.
புராண காலத்திலேயே பல ரிஷிகளும் தேவர்களும் வணங்கிய பெருமாள் இவர் என்று தலவரலாறு கூறுகிறது. பிறகு விஜயநகர ஆட்சிக் காலத்தில் அச்சுததேவராயர், ராமதேவராயர் என்பவர்களால் இந்த சிற்ப அழகு மிக்க ஆலயம் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. ஐந்து நிலைகள் கொண்ட கோபுரம் தாண்டினால் எங்கெங்கும் சிற்ப அழகு மிக்க கலைக்கூடமாக ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் மூலவர் சௌந்தர்ராஜ பெருமாள் எனும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக எழுந்தருளி உள்ளார். இவரை தரிசிக்க ஆயிரம் கண்களும் போதாதோ என்று எண்ணும் அளவுக்கு பேரழகு கொண்ட பெருமாள் இவர். இவரை தரிசிக்க சகல மங்கல நிகழ்வுகளும் தடையின்றி நடைபெறும் என்பது ஐதிகம்.

மூலவர் சந்நிதியின் தென்புறத்தில் சௌந்தரவல்லி தாயார் அருளாட்சி செய்துவருகிறார். மங்கல நாயகியாக விளங்கும் இந்தத் தாயார் கருணை மிகுதியானவள் என்றும் மங்கையரின் திருமாங்கல்யத்துக்கு காவலாக நிற்பவள் என்றும் பக்தைகள் போற்றுகின்றனர். ஆலயம் முழுக்க சாந்நித்யம் மிக்க பல சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக ஹயக்ரீவர், சரஸ்வதி என கல்வி தெய்வங்கள் இருவருக்கும் அடுத்தடுத்து சந்நிதிகள் அமைந்து கல்வி வரம் அருளும் ஆலயமாகவும் இது உள்ளது. இங்குள்ள தன்வந்திரி பகவான் சிறப்பானவர். இவரை வணங்க சகல வியாதிகளும் நீங்கும் என்பது பலர் கூறும் சத்திய சாட்சி.
இங்குள்ள சக்கரத்தாழ்வாரும் வித்தியாசமானவர். இவரைச் சுற்றி காயத்ரி மந்திர தேவதைகள் எழுந்தருளி உள்ளனர். இங்குள்ள நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளதும் விசேஷமானது. விஷ்வக்ஷேனர், இரட்டை விநாயகர், தசாவதார பெருமாள்கள், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள சொர்ண பைரவரை வணங்க கடன் பிரச்னைகள் தீரும் என்பதும் நம்பிக்கை.
இக்கோயிலில் உள்ள கார்த்தவீரியார்ஜூனருக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டியது நடக்கும்; குறிப்பாக தொலைந்து போனவை கிடைக்கும். இங்குள்ள ஆண்டாளுக்கு வியாழன் அன்று மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணம் நடைபெறும்,மகப்பேறு, தொழில் மற்றும் வணிக வளர்ச்சி, வெளிநாட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மேலும் திருவோண நட்சத்திர நாளில் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து விசேஷ பூஜை நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சு குறைபாடு உள்ளவர்கள் குணம் பெறுவார்களாம். மேலும் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்ந்த நைவேத்தியம் படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொண்டால் சகல தேர்வுகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பதும் நம்பிக்கை. அமாவாசை அன்று மூலிகை தைலாபிஷேகம் செய்து மூலிகை லேகியம் நைவேத்தியம் செய்து தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். இதில் கலந்து கொள்ள சகல நோய்களும் தீரும் என்பதும் நம்பிக்கை.
பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் தாயார் சௌந்தரவல்லியை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. தாயார் சௌந்தரவல்லி வீற்றிருக்கும் இந்த கோயிலில் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'கடன்கள் தீரும்' 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; தாயாரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07