வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரிழந்த தொழிலாளி
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமசந்தர் (வயது 28). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூர்க்கத்தனமாக...
ரேபிஸ் அறிகுறி இருந்த காரணத்தால் தனி வார்டில் அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கினார்.
“மூச்சு விட சிரமமாக இருக்கிறது.” என்று மட்டும் கூறிய அவர், வலியில் கதறி துடித்து கொண்டிருந்தார். பிறகு வார்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். கண்ணாடி துண்டுகளை எடுத்து தன்னை தானே தாக்கி கொண்டார். ரத்தம் சொட்ட.. சொட்ட.. மேற்கொண்டு செய்வதறியாமல் விழுந்து.. புரண்டு மீண்டும் மீண்டும் கண்ணாடி துண்டுகளால் தாக்கியுள்ளார்.

மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாவலர்கள் யாராலும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியில் பரிதாபமாக அவர் உயிரும் பிரிந்துவிட்டது. இநத சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவமனை முதல்வர் சொல்வதென்ன?
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், “ரேபிஸ் அறிகுறியுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கினோம். ஆனால் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் அவர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

வார்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து தன் கழுத்து மற்றும் உடல் பாகத்தில் தாக்கி கொண்டார். அவர் கையில் உடைந்த கண்ணாடியுடன் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் எங்களால் உடனடியாக செல்ல முடியவில்லை.
இந்த சம்பவத்தின்போது பெண் மருத்துவர் தான் பணியில் இருந்தார். உரிய பாதுகாப்புடன் அருகில் செல்ல முயற்சித்தும் முடியவில்லை. அதனால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை மீட்டனர். அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளித்தோம்.

ஆனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசடைந்தது. ஒருகட்டத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுக்க நினைத்த எங்கள் முயற்சியும் செயல்படுத்த முடியவில்லை.” என்றார்.
அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ராமசந்தர் உடன் மருத்துவமனைக்கு யாரும் வரவில்லை. உயிரிழந்த பிறகு தான் அவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை ராமசந்தர் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
அதன்பிறகு தான் முழு விபரம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ராமசந்தர் தன்னை தானே தாக்கி உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் நோயால் ஒருவர் தன்னை தானே தாக்கி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
