நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும் மருத்துவர்!
வெயில் காலம் சீக்கிரமே ஆரம்பித்துவிட்டது. அதனால், கூழ் வியாபாரமும் களைகட்டி விட்டது. இந்தக் கூழில் அப்படி என்னதான் ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன..? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அரீஷ்குமார்.
''தமிழர்களின் பாரம்பர்ய உணவுகளில் சிறுதானியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. அதில் கேழ்வரகுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வெயில் காலத்தில் நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதனால், உடல் வறட்சி, செரிமானக்கோளாறுகள் ஏற்படலாம். இக்காலத்தில் திட உணவைவிட திரவ உணவே உகந்தது என்பதை அறிந்து கேழ்வரகை கூழாகப் பருகினார்கள் நம் முன்னோர்கள். முந்தைய நாள் கரைத்துப் புளிக்க வைத்த ராகி மாவை அடுப்பில் வேகவிட்டு, பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மோர், சின்ன வெங்காயம் சேர்த்துப் பருகினால், அக்கூழ் மருந்தாகவே மாற்றமடைகிறது.

உடல் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூழ் அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும். கூழ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. கடும் உடலுழைப்பு செய்வோரின் ஆற்றல் குறையாமல் இருக்க இது உதவியாக இருக்கும்.
இந்த மாவை அப்படியே உபயோகித்தால் வயிற்றுக்கோளாறு, சரும பிரச்னை போன்றவை வரும். எனவேதான் அதைப் புளிக்க வைத்து உபயோகப்படுத்துகிறோம். வெயில் காலத்தில் வாதம் அதிகரிக்கும். இது அதிகரித்தால் இனிப்பு, புளிப்பு, உப்பு போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். அதனாலேயே கூழைப் புளிக்க வைத்து உப்பு சேர்த்து வாதத்தைத் தணிக்கும் உணவாக மாற்றி உள்ளனர். கூழிலில் சேர்க்கப்படும் மோர், சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.

இதில் காணப்படும் பாலிபினால் (poly phenol) நோய் வருவதற்கு காரணமான ஃப்ரீ ரேடிகல்ஸை (free radicals) தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் காத்துக் கொள்வதற்கும் (reduce oxidative stress) உதவுகிறது. இதிலுள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் (probiotics ) நம் உடலை வலுப்பெறச் செய்து செரிமான கோளாறைப் போக்கி உடலைக் காக்கின்றன. அதனால், இந்த வெயில் காலத்தில் உங்கள் உணவில் கூழ் கட்டாயம் இருக்கட்டும்'' என்கிறார் மருத்துவர் அரீஷ்குமார்.