அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளதாக சட்டப் பேரவையில் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கென சட்ட வரைவில் உள்ள வகைமை- I , வகைமை- II உடன் வருமான வரம்புகளைக் கருத்தில் கொள்ளாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறிப்பிடும் வகையில் வகைமை- II (பி) புதிதாக சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, பட்டியலின பிரிவுகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று ரூ.1 கோடி வரையிலான அரசாங்க ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!
இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதுகுறித்து மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா பேசுகையில், "அமைச்சரவையில் இதை அவர்கள் பரிசீலிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும். இது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல். காங்கிரஸுக்கு, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. மற்றவர்களை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை" என்று கூறினார்.
பாஜகவின் எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாகாப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், “கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் பௌத்தர்கள் போன்ற சமூக ரீதியாக அதிகாரம் இழந்த சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் என்ன தவறு? எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. அது திருப்திப்படுத்துவது இல்லையா? பாஜகவைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தவறாகவே கருதப்படுகிறது” எனத் தெரிவித்தார்.